தமிழகத்தின் மின் தட்டுப்பாட்டை தவிர்க்க கூடங்குளத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்க வேண்டும் என்று தென் மாநிலங்களின் கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.
தென்மண்டல மாநிலங்களின் 26-வது கவுன்சில் கூட்டம், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், தலைமைச் செயலாளர்கள் பங்கேற்றனர்.
தமிழக முதல்வரின் உரையை, அவரது சார்பில் பங்கேற்ற நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார். அதில் கூறியிருந்த தாவது:
தமிழகத்தில் நடந்துவரும் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்பார்வை செய்து வருவதால் இந்தக் கூட்டத்தில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. தமிழகத்தில் மீனவர்களின் பாதுகாப்புக்காக 30 ஆயிரம் அவசரகால உதவி இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன. அவை இந்த ஆண்டு முதல் படிப்படியாக வழங்கப்படும். இதற்காக மத்திய அரசு ரூ.2 கோடி நிதி அளித்துள்ளது. இத்திட்டத்துக்கு 75 சதவீதம் மானியத்தை மத்திய அரசு வழங்க வேண்டும்.
தமிழக மீன் வளத்துறைக்கு ரூ.203.70 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டியுள்ளது. 39,401 மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்க உள்ளோம். தமிழக கடலோர பகுதிகள் பாதுகாப்பாகவே உள்ளன. கடலோர ஒழுங்குமுறை மண்டல கட்டுப்பாடுகளால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தமிழகத்தை அதிலிருந்து விடுவிக்க வேண்டும்.
தமிழகம் , கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் இணைகின்ற இடத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. பாதுகாப்பு ரீதியான செலவினங்களைக் கொண்ட மாவட்டங்களின் பட்டிய லில் நீலகிரியையும் சேர்க்க வேண் டும் என்று உள்துறை அமைச் சகத்திடம் வலியுறுத்தியுள்ளேன். மாவோயிஸ்ட்களை கட்டுப்படுத்த 3 மாநிலங்களும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டியது அவசியம்.
சாலை போக்குவரத்து சட்ட மசோதா, மாநிலங்களின் உரிமை களை பறிப்பதாக உள்ளது. அதை தமிழக அரசு ஏற்காது. கூடங்குளம் அணுஉலையின் முதலாவது அலகில் கடந்த ஜூன் முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மின் தட்டுப்பாட்டை தவிர்க்க விரைவில் அதில், மின் உற்பத்தியை தொடங்குவதோடு, 2-ம் அலகிலும் மின் உற்பத்தியை தொடங்க வேண்டும். அதன்மூலம் தமிழகத்துக்கு கூடுதலாக 563 மெகாவாட் மின்சாரத்தை வழங்க வேண்டும்.
ரயில்வே துறையுடன் இணைந்து பணியாற்றவும் தமிழகம் தயாராகவுள்ளது. டெங்கு, சிக்குன் குனியா போன்ற எளிதில் பரவும் நோய்களை தடுக்க மத்திய சுகாதாரத்துறை உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் தனது உரையில் கூறியுள்ளார்.