விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கூட்டுறவு சங்கத்தில் போலிரசீது வழங்கி ரூ.4 கோடி வரைமோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக கூட்டுறவு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சத்தியமங்கலம் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பெயரில் போலியாக நிரந்தர வைப்பு நிதி என்ற பெயரில் ரசீது வழங்கி சுமார் ரூ.4 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியானது.
இதனை தொடர்ந்து விசாரித்த போது கிடைத்தத் தகவல்கள் பின்வருமாறு: சத்தியமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தின் செயலாளராக பதவி வகித்த சாதிக்பாஷா கடந்த மே 11-ம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதற்கிடையே அச்சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிரந்தர வைப்பு தொகை என்ற பெயரில் மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட இணைப்பதிவாளர் அலுவலகத்துக்கு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து நேற்று துணைப் பதிவாளர் குருசாமி, கூட்டுறவு சார் பதிவாளர் கருணாநிதி, கள அலுவலர் அமர்நாத் தலைமையிலான குழு அச்சங்கத்தின் ஊழியர்களான பசுமலை, விஜயராஜ், முருகன், சங்கத் தலைவர் சாந்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தியது.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை அலுவலர்களிடம் கேட்டபோது, “சங்கத்தின் செயலாளர் சாதிக்பாஷா இறக்கும் வரை இந்த மோசடிவிவகாரம் வெளியே தெரியவில்லை. அவரே தனியாக ரசீதுதயாரித்து கையெழுத்திட்டு, தன்னுடன் பணியாற்றுபவர்களையும் கையெழுத்து போட சொல்லி, பணம் கட்டியவர்களுக்கு ரசீது வழங்கியுள்ளார். அவர் இறப்புக்கு பின் இந்த மோசடி வெளியே வந்துள்ளது.
இந்த பணப்பரிமாற்றம் கூட்டுறவு சங்க கணக்குகளில் எவ்விதத்திலும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. தற்போது கிடைத்த தகவலின்படி ரூ.4 கோடி அளவுக்குநிரந்தர வைப்பு நிதி பெறப்பட்டு, போலியான ரசீது கொடுக்கப்பட்டுள்ளது. இத்தொகை மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டு. இந்த மோசடி விவகாரத்தை நேர்மையாக விசாரித்தால் மேலும் பல புதிய தகவல்களும் வெளியாகும்” என்றனர்.
இதைத் தொடர்ந்து துணைப் பதிவாளர் குருசாமியிடம் கேட்டபோது, “நிரந்தர வைப்பு நிதி என்ற பெயரில் அளிக்கப்பட்ட ரசீதில் கையெழுத்திட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளோம். விசாரணை அறிக்கை முடிவு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்” என்றார்.
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபாகரனிடம் கேட்டபோது, “புகாரின் பெயரில் துணைப்பதிவாளரை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கைவந்தவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.