தமிழகம்

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரமில்லை என்ற போலீஸ் அறிக்கை மீது நீதிமன்றம் முடிவு எடுக்கும்: தலைமை நீதிபதி அமர்வு கருத்து

செய்திப்பிரிவு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரமில்லை என லஞ்ச ஒழிப்புபோலீஸார் தாக்கல் செய்துள்ள அறிக்கையை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து நீதிமன்றம் தான் முடிவு எடுக்கும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் கடந்த 2018-ம்ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

இந்த புகாரில் முகாந்திரமில்லை எனக்கூறி லஞ்ச ஒழிப்பு போலீஸார் தரப்பில் புகாரை முடித்து வைத்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அறிக்கையை எதிர்த்து அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘புகாரை முடித்து வைத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் தாக்கல் செய்த அறிக்கைக்கு மனுதாரர்கள் தரப்பில் அப்போதே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சருக்கு எதிரான இந்த புகாரை முந்தைய அரசுதான் முடித்து வைத்தது. நீதிமன்றம் முடித்து வைக்கவில்லை.

கடந்த ஆட்சியின்போது பகலை இரவாக்கி, இரவை பகலாக்கி லஞ்சஒழிப்பு போலீஸார் அறிக்கை தாக்கல் செய்திருந்தால் அதை ஏற்க முடியாது. அறிக்கையை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து நீதிமன்றம் உரிய முடிவு எடுக்கும்" என கருத்து தெரிவித்து விசாரணையை ஜூலை 19-க்கு தள்ளி வைத்தனர்.

SCROLL FOR NEXT