தமிழகத்தில் ஜூன் 28-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட, தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நேற்று காலை முதல் அமலுக்கு வந்த நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து தொடங்கியது.
தமிழகத்தில் ஜூன் 28-ம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, மாவட்டங்கள் 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
தொற்று அதிகமுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் முதல் வகையாகவும், அதைவிட தொற்று குறைவாக உள்ள 23 மாவட்டங்கள் வகை-2 ஆகவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் வகை-3 என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
வகை 1-ல் வரும் 11 மாவட்டங்களில் ஏற்கெனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்றும், வகை 2-ல் வரும் 23 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. வகை 3-ல் வரும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பல்வேறு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள், உணவகங்கள் இரவு 9 மணி வரை இயங்கலாம் என்றும், டீக்கடைகள், சாலையோர உணவகங்களில் இரவு 7 மணி வரை பார்சல் சேவைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பாத்திரக் கடைகள், பேன்சி கடைகள் இரவு 7 மணி வரை இயங்கவும், அரசு அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கவும், திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்பு நடக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, மாவட்டத்துக்குள்ளும், இந்த நான்கு மாவட்டங்களுக்கு இடையிலும் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமரும் வகையில் பேருந்துப் போக்குவரத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று காலை முதல் பேருந்துகள் இயங்கின. அவற்றில் பொதுமக்கள் அதிக அளவில் பயணித்தனர். பேருந்துகள் இயக்கப்படாத மாவட்டங்களின் எல்லை வரை பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேநேரம், வாடகை வாகனங்கள் தவிர, சொந்த வாகனங்களில் செல்ல எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாத 11 மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் காவல் துறையினர் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர். தேவையின்றிச் செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன.