மத்திய மண்டலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் நீரில் மூழ்கி 670 பேர் உயிரிழந்துள்ளனர். காவிரியில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என தீயணைப்புத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், காவிரி ஆற்றின் வரையறுக்கப்பட்ட படித்துறைகள் மட்டுமின்றி, ஆழம், சுழல் தெரியாமல் சிலர் ஆங்காங்கே குளிக்கச் செல்வதால் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். மேலும், உயரமான இடங்களில் இருந்து குதிப்பது, ஆழமான மற்றும் நீர் இழுவை மிகுந்த பகுதிக்குச் செல்வது, படித்துறையில் குளிக்கும்போதோ, துணி துவைக்கும்போதே கவனக்குறைவால் தடுமாறி விழுவது போன்ற காரணங்களால் ஆண்டுதோறும் பலர் நீரில் அடித்துச் செல்லப்படுகின்றனர்.
ஊரடங்கில் உயிரிழப்பு அதிகரிப்பு
இதன்படி, கடந்த 3 ஆண்டுகளில் மத்திய மண்டல மாவட்டங்களான திருச்சியில் 112 பேர், கரூரில் 63 பேர், புதுக்கோட்டையில் 75 பேர், அரியலூரில் 55 பேர், பெரம்பலூரில் 61 பேர், தஞ்சாவூரில் 173 பேர், திருவாரூரில் 50 பேர், நாகை மற்றும் மயிலாடுதுறையில் 81 பேர் என மொத்தம் 670 பேர் நீர்நிலைகளில் மூழ்கி இறந்துள்ளனர். இதில் கடந்த ஆண்டு மட்டும் 303 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக தொழில் நிறு வனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்டவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால், உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதும் ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில், காவிரியில் நீர் பெருக்கெடுத்து வரத் தொடங்கி யுள்ளதால், உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி காவிரி பாயக்கூடிய மாவட்டங்களிலுள்ள நீர்நிலைகளில் ஆபத்தான பகுதிகள் குறித்து மத்திய மண்டல ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி காவல்துறையினர் கணக்கெடுப்பு நடத்தி வரு கின்றனர். இந்த இடங்களில் பொதுப் பணித்துறை, வருவாய்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து எச்சரிக்கை பதாகைகள் அமைக்கவும், அப்பகுதி மக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
ரோந்து செல்ல அறிவுரை
இதுகுறித்து திருச்சி மாவட்ட எஸ்.பி பா.மூர்த்தி கூறும்போது, ‘‘காவிரி கரையோரம் மற்றும் நீர்நிலைகள் உள்ள பகுதிகளில் பகல், இரவு நேரங்களில் ரோந்து செல்லுமாறு போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர்நிலைகளுக்குச் செல்வோர் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். ஒருவேளை யாரேனும் நீரில் மூழ்கினால், உடனடியாக அவர்களை அந்தந்த கிராமங்களிலுள்ள நீச்சல் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.
101-க்கு தகவல் அளிக்கலாம்
திருச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலர் அனுசுயா கூறும்போது, ‘‘ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில்தான் நீரில் மூழ்கி அதிகளவிலானோர் உயிரிழக்கின்றனர். யாரேனும் நீரில் மூழ்கினால், தாமதப்படுத்தாமல் ஓரிரு நிமிடங்களிலேயே 101 என்ற அவசர தொலைபேசி எண்ணில் தகவல் அளித்தால் அந்த நபரின் உயிரைக் காப்பாற்ற பேருதவியாக இருக்கும்.
தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் ரப்பர் படகுடன் பாதுகாப்பு கவச உடையுடன் நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். நீர்சுழற்சி உள்ள இடங்களிலும், தடை செய்யப்பட்ட பகுதிகளிலும் கண்டிப்பாக குளிக்கச் செல்லக்கூடாது. சிறுவர்கள் குளிக்கச் சென்றால், பெரியவர்கள் உடனிருந்து கண்காணிக்க வேண்டும்’’ என்றார்.