பல திட்டங்கள் அறிவித்தும் செயல்படுத்தவில்லை. மானூர் பெரியகுளத்துக்கு தண்ணீர் வந்துசேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மதவகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கரம்பை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் எஸ்.அப்பாத் துரை தலைமையில் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்: பருவமழை காலத்தில் குற்றாலத்தில் இருந்து வரும் தண்ணீர் சிற்றாறு மூலமாக மானூர் குளத்துக்கு வந்துசேரும். மானூர் குளத்துக்கு வந்துசேரும் முன் 19 குளங்களுக்கு தண்ணீர் பெருகுகிறது. 20-வது குளமாக மானூர் பெரியகுளத்துக்கு தண்ணீர் வந்துசேரும் முன் பருவமழை காலம் முடிந்து விடுகிறது. கருப்பாநதி, அடவிநயினார், ராமநதி, குண்டாறு அணைகளை விட மானூர் பெரியகுளத்தின் நீர்பிடிப்பு பகுதி அதிகம்.
இந்த குளம் 1,120 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இக்குளத்தின் மூலம் 3,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடனாநதி அணையிலிருந்து 10 நாட்களுக்கு மானூர் குளம் மற்றும் பள்ளமடை குளத்துக்கு தண்ணீர் தரப்படும் என்று, கடந்த 6.1.2013-ல் அரசு தெரிவித்திருந்தது. அதற்கு ரூ.122 கோடி செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதன்பின் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வி.கே.புரம் டானாவிலிருந்து வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டுவருவதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அத் திட்டமும் நிறைவேற்றப்பட வில்லை. இதுபோல வடக்கு கோதையாறு திட்டம் 10.11.2019-ல் அறிவிக்கப்பட்டது. அத் திட்டத்தையும் செயல்படுத்த வில்லை. இதனால் மானூர் குளம் பெருகாத நிலையுள்ளது. விவசாயிகள் பாதிக்கப்பட்டு ள்ளனர்.
கோதையாறு திட்டத்தை செயல்படுத்தி மானூர் குளத்துக்கு தண்ணீர் வந்துசேருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானூர் பகுதி விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த டி. ஆபிரகாம் உள்ளிட்டோர் அளித்த மனுவில், “மானூர் ஒன்றியத்தில் கடந்த ஆண்டில் உளுந்து பயிர்கள் தொடர் மழையால் சேதமடைந்தன. காப்பீட்டு தொகை இன்னமும் வழங்கப்படவில்லை. இத் தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ குழுக்களுக்கு சேவைபுரிந்து வரும் வாடகை வாகன ஓட்டுநர்கள் அளித்த மனு விவரம்:
கரோனா தொற்றுக்கு எதிரான செயல்பாடுகளில் மருத்துவ பணியாளர்களோடு இணைந்து மக்களுக்கு சேவை செய்து வருகிறோம். எனவே எங்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து, ஊக்கத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்ட ஓட்டுநர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் உதவித் தொகை வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, இன்சூரன்ஸ், சாலை வரி உயர்வு காரணமாக வாகனத்தின் வாடகையை உயர்த்தி அளிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.