தமிழகம்

குன்னூர் சிறப்பு ஏலத்தில் ஒரு கிலோ தேயிலைத் தூள் ரூ.16,400க்கு விற்பனை

ஆர்.டி.சிவசங்கர்

குன்னூரில் நடந்த சிறப்பு ஏலத்தில் ஒரு கிலோ தேயிலைத் தூள் ரூ.16,400க்கு விற்பனையானது.

நீலகிரி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் தேயிலைச் சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் 16 அரசு மற்றும் 180 தனியார் தொழிற்சாலைகளில் தேயிலைத் தூள் உற்பத்தி செய்யப்படுகிறது. வாரத்துக்கு சுமார் 15 லட்சம் கிலோ தேயிலைத் தூள் ஏல மையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

பெருவாரியாக ஆர்தோடக்ஸ், சிடிசி டஸ்ட் ஆகிய இரு ரகங்கள் ஏலம் விடப்படுகின்றன. இந்நிலையில், கைகளாலேயே தயாரிக்கக்கூடிய சிறப்புத் தேயிலைகளான ஒயிட் டீ, கிரீன் டீ, பிளாக் டீ ஆகியவையும் ஏலம் விடப்படுகின்றன. இந்த ரகத் தேயிலையின் அளவு குறைவு என்பதால், அவற்றின் விலை அதிகமாகும்.

இங்கு உற்பத்தியாகும் தேயிலைத் தூள் அரசு ஏல மையமான இண்ட்கோசர்வ் மற்றும் தனியார் ஏல மையமான குன்னூர் தேயிலை வர்த்தகர்கள் சங்கம் மூலம் ஏலம் விடப்படுகிறது.

இந்நிலையில், குன்னூர் தேயிலை வர்த்தகர்கள் சங்கம் மூலம் சிறப்பு ஏலங்களும் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், சர்வதேசத் தேயிலை தினத்தை முன்னிட்டு குன்னூர் தேயிலை வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில் சிறப்பு ஏலம் இன்று (ஜூன் 21) குன்னூரில் உள்ள குன்னூர் தேயிலை வர்த்தகர்கள் சங்க அலுவகத்தில் நடந்தது.

சிறப்பு ஏலத்தில் மொத்தம் 4,043 கிலோ தேயிலைத் தூள் ஏலத்துக்கு வந்தது. இதில், ஒரு கிலோ தேயிலை ரூ.16,400க்கு விலைபோனது வர்த்தகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதுகுறித்துக் குன்னூர் தேயிலை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் வைரவன் கூறும்போது, ''சிறப்பு ஏலம் இணையதளம் வாயிலாக நடைபெற்றது. இதில் அவதா நிறுவனத்தின் சில்வர் நீடில் எக்ஸ்எல் என்ற தேயிலைத் தூள் ரகம் ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.16,400க்கு விற்பனையானது. அதே நிறுவனத்தின் அவதா சில்வர் நீடில் என்ற ரகத் தூள் ஒரு கிலோ ரூ.15,300க்கு விலை போனது. குன்னூரைச் சேர்ந்த கணபதி தேயிலை வர்த்தகர்கள், அவதா சில்வர் நீடில் எக்ஸ்எல் மற்றும் சில்வர் நீடில் தேயிலைத் தூளைத் தலா இரு கிலோ என மொத்தம் 4 கிலோ வாங்கினர். மீதமுள்ள 3,468 கிலோ தேயிலைத் தூள்கள் சராசரியாக ரூ.224-க்கு விற்பனை செய்யப்பட்டது'' என்று தெரிவித்தார்.

கரோனா ஊரடங்கு காலத்திலும் தேயிலைத் தூள் அதிகபட்ச விலையை எட்டியது உற்பத்தியாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

SCROLL FOR NEXT