சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்குப் பின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.
தமிழக சட்டப்பேரவையின் 16-வது தேர்தல் ஏப்ரல் 6 அன்று நடந்தது. இதில் ஸ்டாலின் தலைமையிலான திமுக வெற்றி பெற்றது. மே 7 அன்று திமுக அமைச்சரவை பொறுப்பேற்றது. திமுக தலைமையிலான அமைச்சரவை அமைந்த அன்று தேர்தல் வாக்குறுதிகளாக அளித்தவற்றைத் தனது முதல் கையெழுத்தாக 5 திட்டங்களுக்கான கோப்புகளில் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
இதையடுத்து கரோனா தடுப்புப் பணியே முதற்பணி என அமைச்சரவை முடுக்கிவிடப்பட்டது. அதற்குப் பலனும் கிடைத்தது. கரோனா தொற்று எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டது. 36,000 என்கிற ஒருநாள் தொற்று தற்போது 8,000 என்கிற அளவுக்குக் குறைந்தது. சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகம் இருந்தாலும் பெரும்பாலான மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை குறைந்தது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. இன்று அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் சென்னையில் இருப்பதால் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் எனத் தலைமை கொறடா கோவி.செழியன் அறிவித்திருந்தார்.
அதன்படி திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை 5 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. கூட்டத்தில் தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் எவ்வாறு நடந்துகொள்வது, திமுக உறுப்பினர்கள் தொகுதியில் செயல்படுவது, கட்சிக்குக் கெட்டபெயர் வராமல் தொகுதியில் நடந்துகொள்வது, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேசுவது உள்ளிட்ட பல விஷயங்கள் பேசப்படுவதாகத் தெரிகிறது.