திருநெல்வேலி மாவட்டத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப் பட்டுள்ள நெற்பயிரில் தொண்டை கதிர் குலைநோய் தாக்குதலால் விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.
தொடர்மழை காரணமாக தற்போது நிலவும் மேகமூட்டமான சூழ்நிலையே இந்த நோய் தாக்கதலுக்கு காரணம் என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒருமாதத்துக்கு மேலாக நீடிக்கும் மழையால் ஒருபுறம் விவசாயம் செழிக்கும் என்ற நிலை இருந்தாலும், மறுபுறம் தற்போதுள்ள காலநிலையால் விவ சாயிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிட்டிருக்கிறது.
தொடர் மழையால் சிவகிரி, ராயகிரி பகுதிகளில் 300 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தொண்டை கதிர் குலைநோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருப்பது விவசாயிகளுக்கு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக தொடந்து மழைபெய்து வருவதால் குளங்கள் பெருகின. இதையடுத்து நெல், கரும்பு, மற்றும் நவதானிய வகை பயிர்களை விவசாயிகள் பயிரிட்டிருந்தனர். ராயகிரியை அடுத்துள்ளது முத்தூர்குளம். தென்காசியிலிருந்து ராஜபாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சிவகிரிக்கு தெற்கே உள்ள இப்பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். பிசான பருவத்தில் அதிகமாக விளைச்சல் தரக்கூடியதும், வறட்சியை தாங்கி வளரும் தன்மையுள்ள டீலக்ஸ் கர்நாடகப் பொன்னி ரகமான பி.பி.டி. 5204 வகை நெல்லை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
இந்த ரகம் 135 நாட்களில் அறு வடைக்குத் தயராகும். தற்போது 115-வது நாளில் குலைநோய் தாக்குதல் ஏற்பட்டிருக்கிறது. நெற்பயிரில் கதிர்வளர்ந்து நெல்மணிகளை தரக்கூடிய பருவத்தில் அவை முழுவதும் சாவியாகிவிட்டது விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இதனால் ஏக்கருக்கு 40 மூட்டை நெல்மணிகளுக்கு பதிலாக வெறும் 3 மூட்டைதான் கிடைக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
இது குறித்து விஸ்வநாதப்பேரி விவசாயி எஸ். ராமராஜ் கூறும் போது, “பி.பி.டி5204 ரக நெல் பயிரிடுவதற்கு ஏக்கருக்கு இதுவரை ரூ.25 ஆயிரம் செலவு ஆகியுள்ளது. பயிர்களில் குலைநோய் தாக்கியுள்ளதால் நெல்மணிகள் சாவியாகிவிட்டன. இதனால், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். அரசு அதிகாரிகள் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார் அவர்.
விரைவில் கணக்கெடுப்பு
இந்த நோய் தாக்குதல் குறித்து திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெருமாள் கூறியதாவது:
விலை அதிகம் கிடைக்கும் என்பதால் இந்த பிபிடி 5204 ரகத்தை இப்பகுதி விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த வகை ரகத்தை நோய் எளிதில் தாக்கும் வாய்ப்புள்ளது. தொண்டை கதிர் குலைநோய் என்ற நோய் தாக்குதல் தற்போது வாசுதேவநல்லூர் வட்டாரத்தில் இருப்பது குறித்து விவசாயிகளிடமிருந்து புகார்கள் வந்துள்ளன. மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் விவசாயிகள் ஆட்சியரிடம் தெரிவித்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இழப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.