தேமுதிக தலைவர் விஜயகாந்த் எங்கள் அணிக்கு வந்தால் மகிழ்ச்சி என காங் கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
கிறிஸ்துமஸ், மீலாது நபி தினம், காங்கிரஸ் கட்சியின் நிறுவன தினம் ஆகிய முப்பெரும் விழாக்களை முன்னிட்டு சென்னை நெசப்பாக்கத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000 பேருக்கு நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:
மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரணம் அவர்களது கட்சியினருக்கு தேர்தல் சமயத்தில் வழங்குவதைப்போல் இருக்கிறது. ஆனால், பல்வேறு கட்சியினர் அவரவருக்கு இயன்றவாறு நிவாரணப் பொருட்கள் மற்றும் உதவிகளை வழங்குகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரியில் ஒரே சமயத்தில் அதிக அளவில் தண்ணீரை திறந்துவிட்டதுதான் இந்த வெள்ளத்துக்கு முழு காரணம்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்து சென்னை, கடலூர் மாவட்டங்களில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதேசமயம் தமிழகத்தின் முதல்வர் மக்களை நேரில் சந்திக்காமல் இருப்பது தவறு.
வெள்ளத்தால் தமிழகம் பாதிக்கப்பட்ட நேரத்தில் 24 மணிநேரமும் செயல்பட வேண்டிய முதல்வர், தலைமைச் செயலகத்துக்கு 20 நிமிடம் வந்து செல் கிறார்.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும் சட்டம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவ ரப்பட்டது என பாஜகவினர் சொல் லும் கருத்தை வாதத்துக்காக ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டதே அந்த சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியதுதானே.
தேர்தல் நெருங்கும் சமயத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவரை மற்றவர் சந்திப்பது வழக்கமான நிகழ்வுதான். மக்கள் நலக் கூட்டணியினர் விஜயகாந்தை சந்தித்தது ஒரு சாதாரண நிகழ்வு. தேமுதிக தலைவர் விஜயகாந்த் எங்கள் அணிக்கு வந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி. இப்போது நாங்கள் தேர்தல் குறித்து கவலைப்படவில்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அந்த இன்னலில் இருந்து மீட்க வேண்டும். அதில் கவனம் செலுத்தி வருகிறோம். பிப்ரவரி, மார்ச் மாதத்தில் தமிழக தேர்தல் நிலவரம் குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்.
ஊழல் விவரங்கள்
தமிழக அரசில் ஊழல் பெருகிவிட்டது. தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இன்னும் ஓரிரு தினங்களில் பத்திரிக்கையாளர்களிடம் தமிழக அரசின் ஊழல் விவரங்களை வெளியிடுவேன் என்றார்.