முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கரோனா சிகிச்சை அளிக்க அரசு அனுமதித்துள்ள தனியார் மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கும் இலவச சிகிச்சை அளிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கரோனா தொற்று பரவத் தொடங்குவதற்கு முன்பிருந்தே, ‘மியூகோர்மைகோசிஸ்’ எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படுவோர் இருந்து வந்தனர். குறிப்பாக, கட்டுப்பாடற்ற சர்க்கரை அளவு உள்ளவர்கள், எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்தப் புற்றுநோய் உள்ளவர்கள், தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் இந்த பாதிப்பு ஏற்பட்டு வந்தது. மிகக் குறைவான நபர்களே இந்த பூஞ்சையால் பாதிக்கப்பட்டனர்.
கரோனா இரண்டாம் அலையின் கூடுதல் வீரியம், அதற்கேற்ப சிகிச்சையின்போது அளிக்கப்படும் மருந்துகள் என இரண்டும் இணைந்து நோய் எதிர்ப்பு திறனை குறைப்பதால், கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு தமிழகத்தில் பரவலாக உறுதியாகிவருகிறது. தமிழகத்தில் கடந்த 18-ம் தேதி வரை 2,382 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், கோவை மாவட்டத்தில் மட்டும் நேற்றுமுன்தினம் வரை 144 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில்
இந்நிலையில், முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் கரோனா சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கும் இலவச சிகிச்சை அளிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை இணை இயக்குநர் (பொறுப்பு) ராஜா கூறும்போது, “முன்பு குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மட்டும் காப்பீட்டு திட்டத்தின்கீழ் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பொதுமக்கள் நலன் கருதி தற்போது, காப்பீட்டு திட்டத்தின்கீழ் கரோனா சிகிச்சை அளிக்க அரசு அனுமதித்துள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் கருப்பு பூஞ்சை தொற்றுக்கும் இலவச சிகிச்சை அளிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. கருப்பு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வசதியுள்ள மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை அளிக்கப்படும்” என்றார்.
6 மாதத்தில் 226 பேருக்கு சிகிச்சை
தமிழ்நாடு சுகாதார திட்ட அதிகாரிகள் கூறும்போது, “அரசு ஏற்கெனவே அனுமதித்துள்ள மருத்துவமனைகளில் முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் 13-ம் தேதி வரை 226 பேருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் சிகிச்சைக்கான கட்டணம் நேரடியாக அந்தந்த மருத்துவமனைகளுக்கு காப்பீட்டு திட்டத்தின்கீழ் அளிக்கப்படும்” என்றனர்.