பேராவூரணி அருகே வீட்டுமனைப் பட்டா வழங்குமாறு வாட்ஸ்அப் வழியாக கோரிய பெண்ணின் வீட்டுக்கே சென்று பட்டா தந்த ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். 
தமிழகம்

வாட்ஸ்அப் வழியாக வீடியோ பதிவு மூலம் கோரிக்கை; 24 மணிநேரத்தில் வீட்டுமனைப் பட்டா: பெண்ணின் வீட்டுக்கே சென்று வழங்கிய தஞ்சாவூர் ஆட்சியர்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள சொர்ணக்காடு ஊராட்சி பட்டத்தூரணி வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மனைவி மணியம்மை (40). குடிசை வீட்டில் வசித்து வரும் இவர், தனது வீட்டை புதுப்பித்துக் கட்ட முடிவு செய்தார். ஆனால், அந்த இடம் சம்பந்தமாக உறவினர்கள் சிலர் இடையூறு ஏற்படுத்தி உள்ளனர்.

இதையடுத்து, மணியம்மை தனது பிரச்சினைகள் குறித்து கண்ணீருடன் பேசிய வீடியோ ஒன்றை பதிவுசெய்து, அதை வாட்ஸ்அப் வழியாக பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் சீ.பாலச்சந்தருக்கு ஜூன் 18-ம் தேதி அனுப்பியுள்ளார். அதில், தனக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க ஆட்சியர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து, மணியம்மையின் கோரிக்கை குறித்து ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் கவனத்துக்கு சார் ஆட்சியர் சீ.பாலச்சந்தர் கொண்டுசென்றார். பின்னர், ஆட்சியர் உத்தரவின்பேரில், பேராவூரணி வட்டாட்சியர் க.ஜெயலட்சுமி, பட்டத்தூரணி கிராமத்துக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்ததில், அந்த நிலம் புஞ்சை தரிசு வகைப்பாடு கொண்டது எனவும், வீட்டுமனைப் பட்டா வழங்க ஏதுவானது எனவும் தெரியவந்தது.

இதையடுத்து, 24 மணிநேரத்துக்குள் மணியம்மைக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நேற்று முன்தினம் மாலை மணியம்மையின் வீட்டுக்கேச் சென்று, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பட்டாவை வழங்கினார்.

பேராவூரணி எம்எல்ஏ என்.அசோக்குமார், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) சுகபுத்ரா, சார் ஆட்சியர் சீ.பாலச்சந்தர், பேராவூரணி வட்டாட்சியர் க.ஜெயலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மணியம்மை கூறும்போது, "உறவினர்கள் அளித்த தொல்லையால் மனஉளைச்சல் அடைந்து கண்ணீருடன் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்தேன். உடனே நடவடிக்கை எடுத்த ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி" என்றார்.

SCROLL FOR NEXT