கோவையில் கட்டிட நிறைவு சான்றுபெறாமல் மின் இணைப்பு வழங்கி முறைகேடுகள் நடைபெற்றுள்ள தாகவும், அதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின்செயலாளர் என்.லோகு, சென்னையில் உள்ள லஞ்சம் மற்றும் ஊழல்தடுப்பு, கண்காணிப்பு இயக்குநருக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் வர்த்தக கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, கட்டிட நிறைவு சான்று பெறாமல் மின் இணைப்பு வழங்க கூடாது. இதுதொடர்பான சுற்றறிக்கையை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கடந்தாண்டும், நடப்பாண்டும் பல்வேறு தேதிகளில் அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ளது.
இதில், கடந்த ஏப்ரல் 16-ம் தேதிஅனுப்பிய சுற்றறிக்கையில், 12 மீட்டர் வரை உயரமுள்ள அடுக்குமாடி கட்டிடங்களுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு மின் இணைப்பு வழங்கலாம் என்றும், 12 மீட்டருக்கு மேல் உள்ள வர்த்தகமற்றும் அடுக்குமாடி கட்டிடங்க ளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமெனில், கட்டிட நிறைவு சான்று பெற்று மின் இணைப்பு அளிப்பதற்கான விதியையும், உயர்நீதிமன்ற தீர்ப்புகளையும் கட்டாயம்கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வரைமுறைகளை மீறி, கோவையில் மையக்கோட்டம், நகரிய கோட்டம் மற்றும் ஒண்டிபுதூர் கோட்டத்தில் உள்ள பிரிவு அலுவலகங்களில் 12 மீட்டர் உயரத்துக்கு மேல் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக கட்டிடங்களுக்குமின் இணைப்பு வழங்கியுள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி முதல் நடப்பாண்டு மே 22-ம் தேதி வரை ஒண்டிப்புதூர் கோட்டத்தில் மட்டும் பல பிரிவு அலுவலகங்களில் கட்டிட நிறைவு சான்று பெற்று 83 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில், கோவை மாநகராட்சி முழுவதும் எத்தனை கட்டிடங்களுக்கு கட்டிட நிறைவு சான்று அளிக்கப்பட்டது என்ற தகவல் கேட்கப்பட்டது. அதற்கு மாநகராட்சி அளித்த பதிலில், குறிப்பிட்ட நாள் வரைகட்டிட நிறைவு சான்று எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறெனில் ஒண்டிப்புதூர் கோட்டத்தில் 83 கட்டிடங்களுக்கு கட்டிட நிறைவு சான்றுபெற்று எப்படி மின் இணைப்பு வழங்கப்பட்டது?. இதனால் மின் இணைப்புகள் வழங்கியதில் பெரும் முறைகேடு நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளது. மின் பகிர்மானத்தின் அனைத்து வட்டங்களிலும் வரைமுறைகளை மீறி எத்தனை மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்பதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.