தமிழகம்

சரிவில் இருந்து பின்னலாடைத் துறையை மீட்க உள்நாட்டு உற்பத்தியை அனுமதிக்க வேண்டும்: திருப்பூர் தொழில்துறையினர் எதிர்பார்ப்பு

பெ.ஸ்ரீனிவாசன்

பின்னலாடைத் துறையை சரிவில் இருந்து மீட்க, உள்நாட்டு உற்பத்திக்கு அனுமதியளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு திருப்பூர் தொழில் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடைத்துறை மூலம் ஆண்டுக்குரூ.50 ஆயிரம் கோடி வரை ஏற்றுமதிமற்றும் உள்நாட்டு வர்த்தகம் மேற்கொண்டுவந்த நிலையில், கரோனா தொற்று பரவலால், ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்டதொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளித்துவரும் பின்னலாடை நிறுவனங்களை கரோனா தொற்றின் 2-ம் அலை மிகவும் பாதிக்க செய்துள்ளதால், தொழில் துறையினர் சோர்வடைந் துள்ளனர்.

திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மேற்கு மண்டல மாவட்டங்களில் கரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில், தொழில் துறையை மீட்க அரசு முனைப்பு காட்ட வேண்டும் என தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத்தின் (டீமா) தலைவர் எம்.பி.முத்துரத்தினம் ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, “கரோனா முதல்கட்ட பாதிப்பிலிருந்து திருப்பூர் பின்னலாடைத் துறை மீண்டு வருவதற்குள், அடுத்தபாதிப்புக்குள் சிக்கிவிட்டது. தொழில் துறையினர், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும்வகையில், அனைத்து தொழில் துறையினருக்கும் எளிய முறையிலான கடன் திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும். தவணை செலுத்துவதில் இருந்து 2 மாதங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். மத்தியஅரசிடம் உதவிகளை பெற்றுத் தருவதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

திருப்பூர் பின்னலாடைத் துறையில் ஏற்றுமதி மற்றும் அவற்றுக்கு இடுபொருள் வழங்கும் நிறுவனங்கள் 25 சதவீத தொழிலாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. விதிகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வரும் 28-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களை இயக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, தொழில் துறையினர் கூறும்போது, ‘‘திருப்பூரில் மொத்த உற்பத்தித் திறனில் 40 சதவீதம் உள்நாட்டு உற்பத்தியைசேர்ந்தது. உள்நாட்டு உற்பத்திக்கான முக்கிய சந்தைகளாக உள்ள டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியுள்ளன. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் வரத்தொடங்கும் சூழல் உள்ளது. உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பாலும் சிறு, குறு உற்பத்தி நிறுவனங்களே ஈடுபட்டுள்ளன. எனவே, அந்நிறுவனங்களை, உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT