தருமபுரி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தையை திருடிய பெண்ணை 3 தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பென்னா கரம் வட்டம் நாச்சானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்மணி (35). இவரது மனைவி மாலினி (19). கருவுற்றிருந்த இவர் பிரசவத்துக்காக கடந்த 18-ம் தேதி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறுநாள் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
பிரசவத்துக்கு பின்னர் மாலினி மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தார். நேற்று காலை அவர் கழிவறைக்கு சென்றார். பின்னர் மீண்டும் வார்டுக்கு வந்தபோது, தனது குழந்தை மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், வார்டு முழுவதும் தேடியும் குழந்தையை காணவில்லை.
இதுதொடர்பாக அருள்மணி தருமபுரி நகரக் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் விசாரணை நடத்தி மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர்.அதில், முகக் கவசமும், சிவப்பு நிற உடையும் அணிந்த பெண் ஒருவர் குழந்தையுடன் வெளியேறும் காட்சி பதிவாகி யிருந்தது. இதற்கிடையில், குழந்தை திருட்டு தொடர்பான தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் மருத்துவ மனையில் விசாரணை நடத்தினார்.
மேலும், தருமபுரி டிஎஸ்பி அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து குழந்தையை திருடிய பெண்ணை தேடி வருகின்றனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, “குறிப்பிட்ட பெண் குழந்தையை திருடும் முன்னர் மாலினியிடம் பேசியுள்ளார். அவருடன் உறவினர்கள் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு, மாலினி கழிவறைக்கு சென்றபோது, குழந்தையை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. மேலும், அப்பெண்ணை தனிப்படை போலீஸார் நெருங்கி விட்டனர். விரைவில் அவர் பிடிபடுவார்” என்றனர்.