இந்தியாவில் கரோனா முதல் அலையின்போது ஆல்ஃபா வகை வைரஸ் காணப்பட்டது. இரண்டாவது அலையின்போது வைரஸ் தன்னை வீரியமிக்கதாக உருமாற்றிக் கொண்டு பரவத் தொடங்கியது. இந்தியாவில் 2-வது அலையின்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸை டெல்டா கரோனா வைரஸ் என உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியது.
இதையடுத்து, இந்த புதிய வைரஸ் குறித்த ஆய்வை மேற்கொள்ள முடிவு செய்த தமிழக சுகாதாரத் துறை, தடுப்பூசி செலுத்தியும் பாதிக்கப்பட்ட 1,159 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கர்நாடக மாநிலம் பெங்களூரு மரபணு ஆய்வகத்துக்கு அனுப்பியது. இதில் 554 மாதிரிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, 386 பேருக்கு (70 சதவீதம்) டெல்டா வகை கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலானோர் குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் ஆவர்.
47 பேருக்கு ஆல்ஃபா வகை கரோனா தொற்று இருந்துள்ளது. ஒரே பகுதி அல்லது நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவீதம் பேருக்கும், குடும்பங்களாக பாதிக்கப்பட்டவர்களில் 20 சதவீதம் பேருக்கு டெல்டா வகை கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகத்திடம் கேட்டபோது, “வைரஸ் தம்மை உயிர்ப்புடன் வைத்திருக்க உருமாறிக் கொண்டே இருக்கும். டெல்டா வகை தொற்றாக இருந்தாலும் சரி, வேறு ஏதேனும் புதிய வகையாக இருந்தாலும் சரி தடுப்பூசி செலுத்தினால் பாதிப்பிலிருந்து 90 சதவீதம் நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்” என்றார்.
இதுதொடர்பாக சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறும்போது “டெல்டா, டெல்டா பிளஸ் வகை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பூரணலிங்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் வைரஸ் தன்மை, அதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்” என்றார்.