தமிழகம்

100 நாள் வேலை திட்ட பணித்தள பொறுப்பாளராக திமுகவினரை நியமிக்க நிர்பந்தம்: செங்கை ஆட்சியரிடம் அதிமுக சார்பில் புகார்

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் 359 கிராம ஊராட்சிகள் உள்ளன.மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதித் திட்டத்தின்கீழ் கிராமப் புறங்களில் குளம், குட்டை தூர்வாருதல், சாலை மேம்பாடு போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பணியில் ஈடுபடுபவர்களை மேற்பார்வையிட பணித்தள பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பணித்தள பொறுப்பாளராக 100 நாட்களுக்கு செயல்படுவர்.

இந்நிலையில் தற்போது பணித்தள பொறுப்பாளர்களாக பணியாற்றி வருபவர்களை அப்பணியில் இருந்து விடுவித்து திமுகவைச் சார்ந்தவர்களை நியமிக்க வேண்டும் என்று ஆளும் திமுகவினர் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் நிர்ப்பந்தம் செய்வதாக கூறப்படுகிறது.

இதனால் தற்போது உள்ளவர்கள் பணிகாலம் முடியும் முன்பே வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் செங்கல்பட்டு ஆட்சியராக அண்மையில் பொறுப்பேற்ற ராகுல் நாத்தை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவரும் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் மற்றும் மதுராந்தகம் சட்டப்பேரவை உறுப்பினர் மரகதம் குமரவேல் மற்றும் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் பணித்தள பொறுப்பாளர்களின் நிலை குறித்து புகார் தெரிவித்தனர். ஆட்சியர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதேபோல் திட்ட இயக்குநர் செல்வகுமாரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT