தமிழகம்

சென்னை வெள்ள பாதிப்பு: அதிகரித்து வரும் பேதி, காய்ச்சல், சரும நோய்கள்

ஸுபேதா ஹமீது

சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில் தற்போது காய்ச்சல், சரும நோய்கள் மற்றும் பேதி ஆகியவை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நகரின் மருத்துவமனைகளில் தோல் நோய், ஒவ்வாமை, வைரல் தொற்றுக் காய்ச்சல், மற்றும் வயிற்றுப் போக்கு நோய்க்கூறுகளுடன் நிறைய நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து விஜயா மருத்துவமனை குழுமத்தின் குழந்தை நல மருத்துவர் பத்மா அப்பாஜி கூறும்போது, “காய்ச்சல், சரும நோய்கள், பேதி ஆகிய புகார்களுடன் நிறைய நோயாளிகள் வந்தவண்ணம் உள்ளனர். வெள்ள நீரின் நச்சுத் தன்மை காரணமாக இத்தகைய தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. 25 பேதி நோயாளிகள் இதுவரை வந்துள்ளனர்” என்றார்.

அரசு கீழ்பாக்கம் மருத்துவமனையின் மருந்துத் துறை பேராசிரியர் டி.ரவீந்திரன் கூறும்போது, “தண்ணீரில் புழங்கியதன் மூலம் குதிகால்களில் சேற்றுப் புண்ணுடன் நிறைய பேர் வருகின்றனர். சளி, இருமல், காய்ச்சல், வாந்தி பேதி நோயாளிகள் அதிக வந்தவண்ணம் உள்ளனர்” என்றார். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையுடன் இணைந்து நாளொன்றுக்கு 40 மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றனர்.

தெற்கு புறநகர் பகுதிகளில் 40 மருத்துவ முகாம்களில் சுமார் 6,000 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள காய்ச்சலுக்கான முகாம்களுக்கு மட்டும் நாளொன்றுக்கு 100-150 நோயாளிகள் வருகை தருகின்றனர்.

மூச்சுத் திணறல் நோய்க்கு ஆளானவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தண்ணீரை எக்காரணம் கொண்டும் காய்ச்சாமல் குடிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT