ஆந்திராவில் டேங்கர் லாரி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக, அத்திப்பட்டு புதுநகரில் சமையல் எரிவாயு டேங்கர் லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
திருச்சி மாவட்டம் தும்பளம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர், நாமக்கல்லைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றில் டேங்கர் லாரி ஓட்டுநராக கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்காக கடந்த 15-ம் தேதி, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தில் இருந்து, சமையல் எரிவாயு நிரப்பப்பட்ட டேங்கர் லாரியை தர்மபுரியை நோக்கி ஓட்டி வந்தார்.
ஆந்திராவின் சரளப்பள்ளி பகுதியில் வந்தபோது, மர்ம நபர்கள் சிலர் லாரியை வழி மறித்து ஓட்டுநர் சரவணனை கடுமையாக தாக்கினர். அவரிடம் இருந்த பணம் மற்றும் தொலைபேசி உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு, அவரை சாலையோரம் வீசி சென்றனர். பொதுமக்களால் மீட்கப்பட்ட சரவணன், ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 21-ம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அத்திப் பட்டு புதுநகரில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத் தில், சமையல் எரிவாயு டேங்கர் லாரி ஓட்டுநர்கள் நேற்று முன் தினம் இரவு முதல், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உயிரிழந்த சரவணன் குடும் பத்துக்கு, அவர் பணிபுரிந்த நிறுவனம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும், இந்தியா முழுவதும் செல்லும் சமையல் எரிவாயு டேங்கர் லாரி ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. இதில் 500-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதனால், அத்திப்பட்டு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன வளாகத்திலும், அதை ஒட்டிய பகுதிகளிலும் நூற்றுக் கணக்கான டேங்கர் லாரிகள் வரிசைக்கட்டி நிற்கின்றன. இந்த வேலை நிறுத்தப்போராட்டம் நீடித்தால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங் களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.