அரவிந்தன் - வினோத்: கோப்புப்படம் 
தமிழகம்

வீட்டு தோட்டத்தில் கஞ்சா பயிர்; குடியாத்தம் அருகே 2 பேர் கைது

ந. சரவணன்

குடியாத்தம் அருகே வீட்டு தோட்டத்தில் கஞ்சாவை பயிரிட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த 2 பேரை காவல் துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து கை துப்பாக்கி, இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து காவல் துறையினர் கூறயிதாவது:

வேலூர் மாவட்டம், குடியாத்தம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக வந்த தகவலின் பேரில், குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன் உத்தரவு பேரில், குடியாத்தம் கிராமிய காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு தலைமையிலான காவல் துறையினர், தங்கள் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, குடியாத்தம் அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாபு என்பவரின் வீட்டு தோட்டத்தில் கஞ்சா பயிரிடப்பட்டு வருவதாக, காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் துறையினர் பாபு வீட்டை சுற்றிவளைத்தனர்.

வீட்டுக்குள் நுழைந்து காவல் துறையினர் சோதனையிட்டபோது, வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் பாபுவின் மகன் அரவிந்தன் (24) என்பவர், கஞ்சாவை பயிரிட்டு அதை விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

இதையடுத்து, அரவிந்தனை பிடித்து விசாரித்தபோது அவர் தன் கூட்டாளியான அதேபகுதியைச் சேர்ந்த வினோத் (26) என்பவருடன் சேர்ந்து வீட்டு தோட்டத்தில் கஞ்சாவை பயிரிட்டு அதை குடியாத்தம், பேரணாம்பட்டு, பள்ளிகொண்டா போன்ற பகுதிகளில் விற்பனை செய்து வருவதும், இவர் மீது ஏற்கெனவே இருசக்கர வாகன திருட்டு வழக்கு, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும், வழக்கு தொடர்பாக பலமுறை சிறைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த குடியாத்தம் கிராமிய காவல் துறையினர், அரவிந்தன் மற்றும் வினோத் ஆகிய 2 பேரையும் கைது செய்து, அரவிந்தன் வீட்டில் இருந்த ஒரு கை துப்பாக்கி, 2 இருசக்கர வாகனங்கள், கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு காவல் துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT