பழக்கும் விதத்திலும் பழகும் விதத்திலும் காட்டு யானையும் கனிந்து விடும் என்பதற்கு உதாரணமாக, நீலகிரி மாவட்டம் கூடலூரில் மூன்று பேரை கொன்ற காட்டு யானை சங்கர், வளர்ப்பு யானையாக மாறி மனிதர்களோடு நெருங்கி பழகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. ஆசியாவிலேயே பெரிய யானைகள் வளர்ப்பு முகாம் இதுதான். வனத்தில் தாயை பிரிந்து தவிக்கும் குட்டிகள் மற்றும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள் அடக்கி ஆளப்பட்டு, வளர்ப்பு யானைகளாக வளர்க்கப்படுகின்றன. தற்போது 28 வளர்ப்பு யானைகளை வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.
மாற்றப்பட்டும் ஆட்கொல்லி யானைகள்:
இவற்றில் சில யானைகள் ஆட்கொல்லிகளாக இருந்தவை. தற்போது இவை வளர்ப்பு யானை முகாமில் சாதுவாக மாற்றப்பட்டுள்ளன.
அந்த வகையில், முதன்முதலில் முகாமுக்கு வரவழைக்கப்பட்டது மூர்த்தி எனும் தந்தமில்லாத மக்னா யானை. இந்த யானை கேரளாவில் 17 பேரை கொன்றது. இதனால், இந்த யானையை சுட்டுக்கொல்ல கேரள வனத்துறை உத்தரவிட்டது.
ஆனால், அப்போது முதுமலை சரணாலய காப்பாளராக இருந்த உதயன் தலைமையிலான வனத்துறையினர், யானையை பிடித்து முதுமலைக்கு கொண்டு வந்தனர். முதுமலையில் 'கரால்' என்ற மரக்கூண்டில் அடைக்கப்பட்டு, வளர்ப்பு யானையாக மாற்றப்பட்டு 'மூர்த்தி' என பெயர் சூட்டி வளர்க்கப்பட்டு வருகிறது.
இதே போல, கடந்த 2016-ம் ஆண்டு பந்தலூர் அருகே மூவரை கொன்ற ஆட்கொல்லி யானை 'சீனிவாசன்' என்ற பெயரில் கும்கியாக மாற்றப்பட்டுள்ளது.
அந்த வரிசையில் அடுத்தது கூடலூர் 'சங்கர்'. நீலகிரி மாவட்டம் கூடலூரில் தந்தை, மகன் உட்பட மூன்று பேரை கொன்ற காட்டு யானை 'சங்கரை', அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. வனத்துறையினர் இந்த யானையை பிடிக்க முயன்றனர். அப்போது, மயக்க ஊசியும் செலுத்தினர். ஆனால், மயக்க ஊசியுடன் பிற காட்டு யானைகளுடன் சேர்ந்து கேரள வனத்துக்கு சென்று மறைந்தது.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாக வனத்துறையினருக்கு போக்குக் காட்டி வந்த காட்டு யானை 'சங்கர்', மீண்டும் நீலகிரி மாவட்ட வனத்துக்கு திரும்பியதும், கடந்த பிப்ரவரி 12-ம் தேதி பிடிபட்டது. பிடிபட்ட நாள் முதல் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அபயரண்யம் பகுதியில் அமைக்கப்பட்ட மரக்கூண்டில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் ஆக்ரோஷமாக காணப்பட்ட யானை, பாகன்களின் கட்டளைகளுக்கு பழகி இப்போது அவர்களிடம் தும்பிக்கையை நீட்டி கரும்புகளை கேட்டு வாங்கி உண்ணும் அளவுக்கு பழகியுள்ளது.
சங்கரை, சோமன் மற்றும் பிக்கி தம்பதி பராமரித்து வருகின்றனர். அபயரண்யம் பகுதியில் 'கரால்' அருகிலேயே குடில் அமைத்து கடந்த மூன்று மாதங்களாக இந்த தம்பதி யானையை பராமரித்து வருகின்றனர்.
'யானை கட்டுக்குள் வந்துள்ளதாக' சோமன் கூறுகிறார். அவர் கூறும் போது, "சங்கர் ஆரம்பத்தில் ஆக்ரோஷமாக இருந்தது. கூண்டு அருகே மனிதர்களை கண்டால் தாக்க முற்பட்டது. நாளிடைவில் அதன் ஆக்ரோஷம் குறைந்தது.
நாங்கள் வழங்கும் பசுந்தீவனங்களை உண்ண தொடங்கியது. பின்னர், எங்கள் கட்டளையை ஏற்க தொடங்கியது. மூன்று மாதங்களான நிலையில், தற்போது சாதுவாக மாறி எங்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
இதனால், விரைவில் 'சங்கர்' மரக்கூண்டிலிருந்து விடுவிக்கப்படும். பின்னர், கும்கிகளுக்கான பயிற்சி வழங்கி, கும்கியாக மாற்றப்படும்" என்றார்.
ஆட்கொல்லி யானையை ஒரு கரும்புத் துண்டுடன் நெருங்கும் அளவுக்கு பாகன்கள் பழகியுள்ளனர். யானை பாகன்கள் மற்றும் வனத்துறையினரிடம் இருந்து கரும்புகளை வாங்கி உண்ணும் 'சங்கர்', மனிதர்களுடன் நெருங்கிப் பழகத் தொடங்கிவிட்டது.