தமிழகம் முழுவதும் பல்வேறு தருணங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மீது அரசால் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை தமிழக அரசு கோரியுள்ளது. இதன் மூலம் அந்த வழக்குகள் விரைவில் வாபஸ் பெறப்படலாம் என தெரிகிறது.
கடந்த 2011 முதல் 2021 வரை, 10 ஆண்டுகளில் அப்போதைய தமிழக அரசு, முதல்வர் மற்றும்அமைச்சர்கள் மீதான விமர்சனங்கள் அடிப்படையில், அதிக அளவில் அவதூறு வழக்குகள் அரசாலும், முதல்வர், அமைச்சர்கள் தரப்பிலும் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளில் சில தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. சில வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. மற்ற வழக்குகள் அந்தந்த மாவட்ட நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதேபோல, எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான பல்வேறு வழக்குகள் அதற்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.
தற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த 2011-2021-க்கு இடைப்பட்ட 10ஆண்டுகளில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டபேச்சாளர்கள், பத்திரிகையாளர்கள் மீது தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்குகள் நிலுவை மற்றும் அவற்றின் தற்போதைய நிலை மற்றும் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீது சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும்குற்றவியல் வழக்கு நிலுவை விவரங்களை அரசுக்கு உடனடியாக அனுப்பும்படி சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதன்மூலம், தன்மையைப் பொருத்து அவை வாபஸ் பெறப்படலாம் எனத் தெரிகிறது.