கரூர் வைஸ்யா வங்கி சார்பில் ரூ.1.77 கோடியில் வழங்கப்பட்டுள்ள 10 புதிய ஆம்புலன்ஸ்களை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன், கரூர் வைஸ்யா வங்கியின் பொது மேலாளர் சுதாகர், துணை பொது மேலாளர் கணேசன், உதவி பொது மேலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர்.படம்: ம.பிரபு 
தமிழகம்

கரூர் வைஸ்யா வங்கி சார்பில் 108 அவசரகால சேவைக்கு ரூ.1.77 கோடி மதிப்பில் 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள்: முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார்

செய்திப்பிரிவு

கரூர் வைஸ்யா வங்கி சார்பில் மலைவாழ் மக்கள் பயன்பாட்டுக்கு உட்பட ரூ.1.77 கோடி மதிப்புள்ள 10 ஆம்புலன்ஸ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

108 இலவச ஆம்புலன்ஸ் சேவை திட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கடந்த 2008 செப்டம்பர் 15-ம் தேதி தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டது.

இந்த சேவையில் தற்போது 1,303 அவசரகால ஊர்திகள் (ஆம்புலன்ஸ்கள்) உள்ளன. இந்நிலையில், கரூர்வைஸ்யா வங்கி சமூக பொறுப்புணர்வுடன், தமிழக அரசு செயல்படுத்தும் 108 இலவச அவசரகால ஊர்தி சேவை பயன்பாட்டுக்காக, ரூ.64.47 லட்சம் மதிப்பில் 2 மேம்படுத்தப்பட்ட உயிர்காக்கும் அவசரகால ஊர்திகள், மலைவாழ் மக்களின் சேவைக்காக ரூ.1.12 கோடி மதிப்பிலான 8 அவசரகால ஊர்திகள் என மொத்தம் ரூ.1. கோடியே 76 லட்சத்து 87,472மதிப்பிலான 10 அவசரகால ஊர்திகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் சேவைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்ட இயக்குநர் ச.உமா, கரூர் வைஸ்யா வங்கியின் பொது மேலாளர் சுதாகர், துணை பொது மேலாளர் கணேசன், உதவி பொது மேலாளர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, கடந்த மே 17 -ம் தேதிகரோனா நிவாணம் தொடர்பாக மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக ரூ.1 கோடியை கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம், கரூர் வைஸ்யாவங்கியின் நிர்வாக இயக்குநர் பி.ரமேஷ்பாபு வழங்கினார்.

SCROLL FOR NEXT