முத்தாலங்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் நந்தி மற்றும் பெண் சிலை மீட்கப்பட்டது.
வைகுண்டம் வட்டம் முத்தாலங்குறிச்சியை சேர்ந்த வள்ளிநாதன் என்பவர், பூந்தலை உடையார் சாஸ்தா கோயில் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் நேற்று முன்தினம் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சிலை ஒன்று தென்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் கந்தசுப்பு, வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு வந்தனர்.
உள்ளூர் இளைஞர்களின் உதவியுடன் சுமார் 60 கிலோ எடை கொண்ட பெண் சிலை மீட்கப் பட்டது. இதுபோல், ஆற்றில் கிடந்த சுமார் ஒரு டன் எடை கொண்ட நந்தி சிலையும் இயந்திரம் மூலம் மீட்கப்பட்டது. இரண்டு சிலைகளும் வைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் பெற்று இந்த சிலைகள் திருநெல்வேலி அருங்காட்சியகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என வருவாய்த்துறை யினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும்போது, ‘‘ நந்தி சிலை கிடைத்த இடம் அருகே கோயில் கட்டிடம் இருந்ததற்கான அடை யாளம் தெரிகிறது. செங்கல் கட்டுமானம் மற்றும் கல் தூண்கள் காணப்படுகின்றன. அந்த இடத்தை ஆய்வு செய்தால் பல்வேறு தகவல்கள் கிடைக்கும்’’ என்றார்.
ராணி சிலை
கல்வெட்டு ஆர்வலரான ஆறுமுகநேரி பேராசிரியர் தவசி மாறன் கூறும்போது, “தாமிரபரணி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட பெண் சிலையில் கரங்கள் குவித்தவாறும், கால் மடங்கிய நிலையிலும், சுவாமி தரிசனம் செய்யும் போது அமர்ந்திருப்பது போல் உள்ளது. அணிகலன்களை வைத்துப் பார்க்கும் போது ராணி போலத் தோற்றமளிக்கிறது. இதன் காலம் சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கும்,” என்றார்.
கிராம மக்கள் கூறும்போது, ‘‘16-ம் நூற்றாண்டில் முத்தாலங்குறிச்சியில் அழிந்து போன சிவன் கோயிலின் சுவடுகள் தற்போது ஒன்றொன்றாக வெளியே தெரிய வருகிறது’’ என்றனர்.