விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் எழுதியுள்ள ‘அண்ணா அருமை அண்ணா’ நூலை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் நேற்று வெளியிட்டார்.
முன்னாள் முதல்வர் பேரறிஞர் குறித்து ‘அண்ணா அருமை அண்ணா’ என்னும் நூலை விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் எழுதியிருந்தார். அதன் வெளியீட்டு விழா சென்னை ராணி சீதை மன்றத்தில் நேற்று நடந்தது. புத்தகத்தின் முதல் படியினை மதிமுக பொதுச் செய லாளர் வைகோ வெளியிட அதை முன்னாள் அமைச்சர் ஹெச்.வி. ஹண்டே பெற்றுக் கொண்டார்.
மதிமுக பொதுச்செயலாளர் தனது சிறப்புரையில், "அண்ணா குறித்த புத்தகத்தை எழுத ஜி.விசுவநாதன் மிகத் தகுதியானவர். அதை வெளியிட பல தகுதியான மூத்த தலைவர்கள் இருக்கையில், அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததை பெரும் பேறாக கருதுகிறேன்" என்றார்.
தமாகா மூத்த தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், இந்திய கம்யூ னிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டி யன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி ஆகியோரும் பேசினர்.
நிகழ்ச்சியில் ஏற்புரையாற்றிய ஜி.விசுவநாதன் பேசியதாவது:
அண்ணா குறித்து நான் எழுதிய இந்த புத்தகத்தை எல்லோரும் படிக்க வேண்டும். ஒரு மனிதர், தலைவர், ஆட்சியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அண்ணா உதாரணமாக இருந்தார். அரசியல் நாகரிகம் என்ற சொற்றொடரை தமிழுக்கு அண்ணாதான் தந்தார். ஆனால், அந்த நாகரிகம் தமிழகத்தில் மட்டும் இல்லை.
இந்த புத்தகத்தின் கருத்துகள் அதை ஏற்படுத்த வேண்டும் என்று கருதுகிறேன். உலகத் தரவரிசையில் கல்வியில் நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம். இந்தியாவிலும் தமிழகம் கல்வியில் பின்தங்கியுள்ளது. இந்தாண்டு ஐஐடியில் 10 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர்.
அதில், 188 பேர்தான் தமிழகத்தை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் கல்வி முறையை மாற்ற வேண்டும். இதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் விழா வுக்கு தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமி நாதன் வாழ்த்துரை வழங்கினார். கண்ணதாசன் பதிப்பக உரிமையாளர் காந்தி கண்ணதாசன் நன்றி தெரிவித்தார்.