தமிழகத்தில் போலி ரசீது மூலம் வரி ஏய்ப்பு செய்தால் குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்தார்.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள வணிகர்களுடன் கலந்தாய்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பெ. கீதாஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், த. மனோதங்கராஜ், எம்.எல்.ஏக்கள், வணிகவரித்துறை முதன்மை ஆணையர் எம்.ஏ. சித்திக், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பி. ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் ம.ப. சிவன் அருள், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:
கடந்த 11 ஆண்டுகளுக்குப்பின் தற்போது வணிகர்களை நேரடியாக அழைத்து ஜிஎஸ்டி தொடர்பாக பல்வேறு கருத்துக்களை கேட்டு வருகிறோம். அந்த கருத்துக்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு மட்டும் மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ. 15 ஆயிரம் கோடி வர வேண்டியுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டு பல்வேறு விரிவிதிப்பு விதிவிலக்குகளை மாநில நிதியமைச்சர் கேட்டுள்ளார். கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு விதிவிலக்கு தர வேண்டும் என்பதை வலியுறுத்தியதால், 18 சதவீதமாக இருந்த வரி விதிப்பு தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுபோல் கரும்பு பூஞ்சை நோய்க்கான மருந்துக்கான வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
போலி ரசீதுகள் மூலம் வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். 2015-ல் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
மேலும் முடிந்தால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஏழை எளிய மக்கள் தினந்தோறும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதால் பெட்ரோல் டீசல் விலை குறைக்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 90 சதவிகிதம் பத்திரங்கள் அன்றைய தினமே முடிக்கப்பட்டு பட்டா உடனடியாக வழங்கக்கூடிய ஏற்பாடுகளை செய்திருந்தோம். பத்திரப்பதிவு செய்யும்போது அதற்கான நேரத்தையும் குறிப்பிட ஏற்பாடு செய்து வருகிறோம். இன்னும் 10 தினங்களுக்குள் தமிழகம் முழுதும் உள்ள 575 பத்திரப்பதிவு அலுவலகங்களில் இது நடைமுறைக்கு கொண்டுவரப்படும். இடைதரகரின் ஆதிக்கத்தை ஒழிக்கும் வகையில் யார் பத்திரம் பதிகிறார்களோ அவர்களது பதிவு நேரம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் ஆன்லைன்மூலம் பெறப்பட்டு டோக்கன் வழங்கும் புதிய நடைமுறை 10 தினங்களுக்குள் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.