தமிழகம்

கால்வாய்களைத் தூர் வார நிதியில்லை: தனியார் உதவியை நாடும் மதுரை மாநகராட்சி

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரையில் கால்வாய்களை தூர் வார நிதியில்லாததால் தனியார் ஜேசிபி இயந்திர உரிமையாளர்கள் உதவியுடன் கால்வாய்களை தூர்வார மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மதுரை மாநகராட்சியில் முந்தைய 72 வார்டுகளில் கிருதுமால் கால்வாய், பனகல் ரோடு கால்வாய், அவனியாபுரம் கால்வாய், சிந்தாமணி கால்வாய், அனுப்பானடி கால்வாய் உட்பட 13 கால்வாய்கள் உள்ளன. இந்த கால்வாய்கள் 44.23 கி.மீ. தூரம் செல்கின்றன.

விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் 40 கால்வாய்கள் உள்ளன. இவற்றின் மொத்த நீளம் இன்னும் அளவிடப்படவில்லை. மழைக் காலத்தில் மாநகராட்சி பகுதியில் பெய்யும் மழைநீர் தேங்காமல் இந்த கால்வாய்கள் வழியாக புறநகர் நீர்நிலைகளுக்கு சென்றுவிடும். தற்போது, இந்த கால்வாய்கள் சில இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு சுருங்கிப்போய் உள்ளன.

பெரும்பாலான இடங்களில் குப்பைகள், மண் நிரம்பி தண்ணீர் செல்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றன. சென்னை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழைநீர் வெளியேற வழியில்லாமல் குடியிருப்பு பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. அதுபோன்ற கனமழை மதுரையில் பெய்யும்பட்சத்தில் குடியிருப்புகள் மூழ்கும் அபாயம் உள்ளது.

அதனால், அப்படி வெள்ள அபாயம் வரக்கூடாது என்பதால் மதுரை மாநகராட்சியில் தூர்வாரப் படாத மழைநீர் கால்வாய் களை தூர்வார முடிவு செய்யப் பட்டுள்ளது. அதற்காக நேற்று முன்தினம் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா, ஆணையர் சி.கதிரவன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: ஆய்வுக் கூட்டத்தில் ஒரே நேரத்தில் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு, அனைத்து கால்வாய்களையும் தூர்வார முடிவு செய்யப்பட்டது. மாநகராட்சியில் 4 ஜே.சி.பி. இயந்திரங்கள் மட்டுமே உள்ளதால், இவற்றைக் கொண்டு அனைத்து கால்வாய்களையும் தூர்வாருவது என்பது முடியாத காரியம். அதனால், தனியாரிடம் இருந்து ஜே.சி.பி. இயந்திரங்களைப் பெற்று தூர்வார முடிவு செய்யப்பட்டது. மாநகராட்சியில் தற்போது நிதி பற்றாக்குறை உள்ளது. அதனால், கால்வாய்களை தூர்வார மதுரை ஜே.சி.பி. உரிமையாளர்கள் சங்கத்தினரின் உதவி நாடப்பட்டது. டீசல் மட்டும் மாநகராட்சி போட்டுக்கொள்வதாகவும், ஜேசிபி இயந்திரங்களை இலவசமாகத் தரவும் அவர்களிடம் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

அவர்கள் தொழில்ரீதியாக மாநகராட்சியை சார்ந்திருப்பதால் ஜேசிபி இயந்திரங்களை இலவசமாக தருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். அதனால், இன்று முதல் ஒரே நேரத்தில் இந்த கால்வாய்கள் தூர்வாரப்படுகின்றன என்றார். கால்வாய்களை தூர்வாருவதுடன் நின்றுவிடாமல் ஆக்கிரமிப்பில் இருக்கும் பகுதிகளை மீட்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி உயர திகாரி ஒருவரிடம் கேட்ட போது, ஒரு ஜேசிபி வாடகை ஒரு மணி நேரத்துக்கு குறைந்தபட்சம் ரூ.700 முதல் ரூ.1,000 வரை செலவாகும். அதனால், ஜேசிபி இயந்திரங்களை வாடகையில்லாமல் பெற்றுக் கொண்டு டீசல் மட்டும் மாநகராட்சி போடுவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது என்றார்.

SCROLL FOR NEXT