முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் மறைவுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
'பறக்கும் சீக்கியர்' என்று அழைக்கப்பட்ட மில்கா சிங், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயப் பிரிவில் தங்கம் வென்ற ஒரே இந்தியர்.
1958-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மில்கா சிங் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்றார். 1960ஆம் ஆண்டு ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை சிறிய வித்தியாசத்தில் தவறவிட்டாலும் அந்தப் போட்டியால் அவருக்கு சர்வதேச அடையாளம் கிடைத்தது.
1962ஆம் ஆண்டு இந்தோனேசியத் தலைநகர் ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், 400 மீட்டர் ஓட்டப் பந்தயம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டப் பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்றார்.
இந்நிலையில், மில்கா சிங் நேற்று (ஜூன் 19) நள்ளிரவில் காலமானார். அவருக்கு வயது 91. கரோனாவிலிருந்து மீண்டவர், கரோனாவுக்குப் பிந்தைய பாதிப்புகளால் உயிரிழந்தார். அவரது மறைவு தடகள வீரர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, மில்கா சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மில்கா சிங் மறைவுக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 19) வெளியிட்ட இரங்கல் செய்தியில், "இந்தியாவின் தலைசிறந்த தடகள வீரர்களில் ஒருவரும் 'பறக்கும் சீக்கியர்' என்று அழைக்கப்படுபவருமான மில்கா சிங்கின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். சோதனைகளை வென்று சாதனை படைத்த அவரது வாழ்வு மேலும் பல இளம் இந்தியர்களைச் சாதிக்கத் தூண்டட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.