ரஜினிகாந்த்: கோப்புப்படம் 
தமிழகம்

மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார் ரஜினி

செய்திப்பிரிவு

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவப் பரிசோதனைக்காக இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடிகர் ரஜினிக்கு சிறுநீரக பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டது. இதையடுத்து, அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளீனிக்கில் சிறப்பு மருத்துவர்கள் குழுவினரால் ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, ஆண்டுதோறும் அவர் அமெரிக்காவில் அதே மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இந்தாண்டு கரோனா பரவல் காரணமாக அவரால் அமெரிக்கா செல்ல முடியவில்லை.

இந்நிலையில், அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று குறைந்து வருவதால் ரஜினி அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தார்.

அதன்படி, இன்று (ஜூன் 19) அதிகாலை ரஜினி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். சென்னையிலிருந்து கத்தார் ஏர்லைன்ஸ் மூலமாக தோஹா சென்று, அங்கிருந்து வேறொரு விமானம் மூலமாக அமெரிக்கா செல்கிறார். அவருடன் அவர் மனைவி லதா ரஜினிகாந்த்தும் உடன் செல்கிறார். அங்கு ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளீனிக் மருத்துவமனையில் ரஜினிகாந்த்துக்கு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது.

'தி கிரே மேன்' படப்பிடிப்புக்காக ஏற்கெனவே அமெரிக்கா சென்றுள்ள தனுஷ், கரோனா பரவல் காரணமாக அங்கேயே தங்கியிருந்தார். இந்நிலையில், அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த்துடன் அவருடைய மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ், பேரன்கள் இணைந்துகொள்ள உள்ளனர். பரிசோதனை முடிந்து மூன்று வார காலம் அமெரிக்காவில் தங்கியிருந்து பின்னர் ரஜினியுடன், அவர்கள் அனைவரும் சென்னை திரும்ப உள்ளார்.

SCROLL FOR NEXT