மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் தாக்கப்படுவதை தடுக்க பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு இயற்ற வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கம், அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள். படம்: ம.பிரபு 
தமிழகம்

மருத்துவ பணியாளர்கள் தாக்கப்படுவதை தடுக்க சட்டம் இயற்றக் கோரி மருத்துவர்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

மருத்துவப் பணியாளர்கள் தாக்கப்படுவதை தடுக்க சட்டம் இயற்ற வலியுறுத்தி நாடு முழுவதும் மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர்.

மருத்துவர்கள் உட்பட மருத்துவத் துறை பணியாளர்கள் தாக்கப்படுவதை தடுக்க, மருத்துவமனைகள் மற்றும் மருத்துவத் துறை பணியாளர் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு இயற்ற வலியுறுத்தி ஜூன் 18-ம் தேதியை தேசிய எதிர்ப்பு தினமாகவும், ‘காப்போரை - காப்பீர்’ என்ற அடைமொழியையும் இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தது.

அதன்படி, தேசிய எதிர்ப்பு தினமான நேற்று தமிழகம் உட்பட நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இந்திய மருத்துவ சங்கம், அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதுதொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் (தமிழக கிளை) தலைவர் பி.ராமகிருஷ்ணன், செயலாளர் ஏ.கே.ரவிக்குமார், அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி பி.பாலகிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது:

அசாம், உத்தர பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுகிறது.

இதுபோன்ற தாக்குதலை தடுக்கவும், தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கும் வகையிலும் 2008-ம்ஆண்டு மருத்துவமனை மற்றும்மருத்துவத் துறை பணியாளர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது.

23 மாநிலங்கள்

23 மாநிலங்களில் இந்த சட்டம்அமலில் உள்ளது. மற்ற மாநிலங்களில் சட்டம் இல்லை. அதனால், இந்தியா முழுவதற்குமான சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT