தமிழகத்தில் முழு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள், அரசு அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், கடந்தமே 24-ம் தேதி முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது அடுத்தடுத்து 3 கட்டங்களாக ஜூன் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தவிர,கரோனா பரவல் அதிகமாக உள்ள திருச்சி உள்ளிட்ட மத்திய மாவட்டங்கள், கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள் என 11 மாவட்டங்களில் அடிப்படை பணிகளுக்கான தளர்வுகளும், எஞ்சியுள்ள சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், கரோனா பரவலும் படிப்படியாக குறைந்து தற்போது தினசரி பாதிப்பு 10 ஆயிரத்துக்குள் வந்துள்ளது.
இந்நிலையில், நீட்டிக்கப்பட்ட கரோனா ஊரடங்கு வரும் 21-ம்தேதியுடன் முடிகிறது. இதையொட்டி, ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின்சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவினர், அரசு அதிகாரிகள், சிறப்பு பணிக் குழுவினருடன் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.
குறிப்பாக, கரோனா தொற்று குறைந்துள்ள சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பொது போக்குவரத்தை குறைந்த அளவில் மாவட்டத்துக்குள் மட்டும் இயக்க அனுமதிப்பது, மாவட்டங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து, துணி, நகைக் கடைகள் இயங்கஅனுமதிப்பது, அரசு அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்களை அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், கரோனா 3-வது அலை பரவ வாய்ப்பு உள்ளது என்பதால் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்துவது, அடுத்த அலைக்குள் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்தும் இன்று ஆலோசனை நடத்தப்படும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.
4.80 லட்சம் தடுப்பூசிகள் வருகை
தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கரோனாதடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கும், அடுத்தகட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. 3-வது கட்டமாக 18 வயதுக்குமேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டது. மத்திய தொகுப்பில் இருந்தும், தாமாகவும் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை தமிழக அரசு கொள்முதல் செய்து வருகிறது.
தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருப்பதால், மையங்களில் டோக்கன் விநியோகித்து தினமும் 400, 500 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் புனே சீரம் நிறுவனத்தில் உற்பத்தியாகும் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி 4.80 லட்சம்டோஸ் விமானம் மூலம் நேற்றுசென்னைக்கு கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட சுகாதாரத் துறை அதிகாரிகள், குளிர்சாதன வாகனங்கள் மூலம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்குக்கு அனுப்பிவைத்தனர்.
தடுப்பூசிகளை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமார் 1.15 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் பெற்றும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
புதிதாக 8,633 பேருக்கு கரோனா தொற்று
தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் நேற்று ஆண்கள் 4,882, பெண்கள் 3,751 என மொத்தம் 8,633 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 1,069, ஈரோட்டில் 1964, சென்னையில் 492 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 24 லட்சத்து 6,497 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகம் முழுவதும் 22 லட்சத்து 86,653 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 19,860 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கோவையில் 11,644, ஈரோட்டில் 9,365, திருப்பூரில் 8,917, சென்னையில் 3,360 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 89,009 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அரசு, தனியார் மருத்துவமனைகளில் நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 287 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 48 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30,835 ஆக உயர்ந்துள்ளது.