வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாக னங்களுக்கான இலவச வாகன பழுது நீக்கமுகாம் நேற்று தொடங் கியது. சென்னையில் உள்ள சேவை மையங்களில் முதல் நாளான நேற்று ஆயிரக்கணக்கான வாகனங்கள் குவிந்ததால் மெக்கானிக்குகள் திணறினர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பில் சிக்கி ஏராளமான வாகனங்கள் பழுதாகின. அவற்றை சரிசெய்துகொள்ள 10 நாள் இலவச சேவை முகாம் நடத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த முகாம் நேற்று தொடங்கியது. வரும் 21-ம் தேதி வரை நடக்கும் இந்த முகாமில், பஜாஜ், யமஹா, டிவிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தங்களது 200 சேவை மையங்கள் மூலம் சேவை அளிக்க முன்வந்துள்ளன.
முகாமின் முதல் நாளான நேற்று, சென்னையில் உள்ள சேவை மையங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் குவிந்தன. அவற்றை சரிசெய்யும் பணியில் ஏராளமான மெக்கானிக்குகள் ஈடுபட்டுள்ளனர். சிந்தாதிரிப்பேட்டை, ஆவடி உள்ளிட்ட இடங்களில் உள்ள டிவிஎஸ் ஆட்டோ சேவை மையங்களில் 20-க்கும் அதிக மான ஆட்டோக்கள் நேற்று பழுது பார்க்கப்பட்டன. இதுபோல பல மையங்களிலும் வாகன பழுது நீக்கும் பணிகள் தீவிரமாக நடந் தன. சில இடங்களில் மெக்கானிக் பொதுமக்கள் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதுபற்றி பல தரப்பினரும் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
பணம் கேட்கிறார்கள்..
சென்னை தி.நகரை சேர்ந்த வாகன உரிமையாளர் சரவணன்: வெள்ளத்தில் என் வாகனம் முழுதாக மூழ்கியதால் ஸ்டார்ட் செய்ய முடியவில்லை. இலவச சேவை மையத்துக்கு எடுத்துச் சென்றால் 10 நாள் கழித்து வரச் சொல்கிறார்கள். இலவசம் என்று கூறிவிட்டு பணம் வேறு கேட் கிறார்கள்.
போதிய மெக்கானிக் இல்லை
டிவிஎஸ் நிறுவன டீலரான ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்த ராயல் மோட்டார்ஸ் மேலாளர் நிதின்: அரசு சார்பிலான சேவை முகாம் தற்போது தொடங்கப்பட்டாலும், மழை விட்டு வெள்ளம் வடிய தொடங்கியது முதலே, வாகனங்கள் சேவை மையங்களுக்கு வரத் தொடங்கின. இவ்வாறு, எங்கள் மையத்துக்கு 200-க்கும் அதிகமான வாகனங்கள் வந்துள்ளன. அரசு முகாம் தொடங்கிய முதல் நாளில் மதியம் வரை 100 வாகனங்கள் வந் துள்ளன.
வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிண்டி, ஈக்காட்டுத் தாங்கல் பகுதியில் மட்டும் 40 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் உள்ளன. ஒட்டுமொத்த சென்னை யில் இந்த எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டும். ஆனால், எங்களது சேவை மையங்கள் 42 மட்டுமே உள்ளன. பழுதான எல்லா வாகனங்களையும் 10 நாட்களில் சரிசெய்வது சவாலான வேலை. அந்த அளவுக்கு மெக்கானிக்குகள் இல்லை. எனவே, பழுதுநீக்க அரசு கூடுதல் ஆட்களை ஏற்பாடு செய்தால் சிறப்பாக இருக்கும்.
சேவைதான் இலவசம்
பஜாஜ் நிறுவன டீலரான சூளைமேடு காவ்யா மோட்டார்ஸ் மேலாளர் எம்.சுரேஷ்: இலவச முகாமில் சேவைதான் இலவசம். ஆனால் உதிரிபாகங்கள், ஆயில் செலவு போன்றவற்றுக்கு பணம் கேட்டால் பொதுமக்கள் வாக்குவாதம் செய்கின்றனர்.
8,000 மெக்கானிக்குகள்
ராயப்பேட்டை மெக்கானிக் எஸ்.கிருஷ்ணமூர்த்தி: அதிக வாக னங்கள் ஒரே நேரத்தில் குவிந்த தால் சேவை மையங்கள் திணறு கின்றன. இருசக்கர வாகன மெக் கானிக் சங்கம் போன்ற அமைப்புகளில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான மெக்கானிக்குகள் உள்ளனர். மழை விட்டதும், அவர்களை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபடுத்தியிருந்தால், எல்லா வாகனங்களும் இந்நேரம் சரிசெய்யப்பட்டிருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.