ஹெலிகாப்டர் பைலட் பயிற்சியில் சிறப்பிடம் பிடித்த சப் லெப்டினென்ட் பவன்ராஜிக்கு கேரள ஆளுநரின் சுழற்கோப்பையை வழங்கிய கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் அஜேந்திர பஹதூர் சிங். 
தமிழகம்

இந்தியக் கடற்படையில் அமெரிக்காவின் எம்.எச் 60 ஆர் ஹெலிகாப்டர்: கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி அஜேந்திர பஹதூர் சிங் தகவல்

வ.செந்தில்குமார்

இந்தியக் கடற்படையின் பலத்தை மேம்படுத்தும் வகையில் அமெரிக்காவின் எம்.எச்60 ஆர் என்ற வகை ஹெலிகாப்டர், மேம்படுத்தப்பட்ட இலகு ரக துருவ் வகை ஹெலிகாப்டர் ஆகியவை விரைவில் சேர்க்கப்பட உள்ளதாக கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி அஜேந்திர பஹதூர் சிங் தெரிவித்தார்.

அரக்கோணத்தில் உள்ள ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தில் 96-வது ஹெலிகாப்டர் பைலட் பயிற்சி நிறைவு விழா இன்று (ஜூன் 18) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமானத் தளத்தின் கமாண்டர் வினோத்குமார் முன்னிலை வகித்தார். இதில், இந்தியக் கடற்படையின் கிழக்கு பிராந்திய தளபதி வைஸ் அட்மிரல் அஜேந்திர பஹதூர் சிங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பயிற்சி வீரர்களின் அணிவகுப்பைத் திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டு, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

22 வாரப் பயிற்சியில் ஒட்டுமொத்த அளவில் சிறப்பாகப் பயிற்சியை நிறைவு செய்ததற்கான கேரள ஆளுநரின் சுழற்கோப்பை மற்றும் களப் பயிற்சியில் சிறப்பாக நிறைவு செய்ததற்கான புத்தகப் பரிசை சப்.லெப்டினென்ட் பவன் ராஜ் மற்றும் கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதியின் சுழற்கோப்பையை லெப்டினென்ட் தனஞ்சய் பிரகாஷ் ஜாதவ் ஆகியோருக்குச் சிறப்பு விருந்தினர் அஜேந்திர பஹதூர் சிங் வழங்கிப் பாராட்டினார்.

இதனைத் தொடர்ந்து வைஸ் அட்மிரல் அஜேந்திர பஹதூர் சிங் பேசும்போது, ‘‘கடற்படைப் பிரிவில் ஹெலிகாப்டர் பைலட்டாகச் செயல்படுவது சவால் நிறைந்த பணியாகும். பல்வேறு சூழ்நிலைகளில் இயந்திரங்களின் பின்னால் மனிதன் செயல்படுகிறான். இளம் பைலட்டாகத் தேர்வாகியுள்ள நீங்கள் இந்தியக் கடற்படையில் சிறப்பாகப் பணியாற்ற வாழ்த்துகிறேன். கடற்பகுதியைக் கண்காணிக்க நீண்ட தொலைவு செல்லும் விமானங்கள் இருக்கும்போதிலும் கப்பலின் ஒரு பகுதியாக ஹெலிகாப்டர்கள் இரவு, பகல் என்று பாராமல் செயல்பட வேண்டும்.

அரக்கோணம் ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமானத் தளத்தில் நடைபெற்ற ஹெலிகாப்டர் பைலட் பயிற்சி நிறைவு விழாவில் வீரர்களின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்ட கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் அஜேந்திர பஹதூர் சிங்.

ஹெலிகாப்டர் பைலட்டுகள் கூட்டுப் பயிற்சிகள், தேடுதல், மீட்பு எனப் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். விமானங்கள் விலை மதிப்புமிக்க சொத்து என்பதை நீங்கள் நினைவில்கொள்ள வேண்டும். எந்த ஒரு சிறந்த பயிற்சி பெற்ற விமானியாலும் அதை உருவாக்கவும், ஈடு செய்யவும் முடியாது. எனவே, கடுமையான விதிகளைப் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றுவதில் நீங்கள் எந்த விதத்திலும் சமாதானம் ஆகமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

இந்தியக் கடற்படையின் மிக முக்கியமான விமானத் தளமாக ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமானத் தளம் செயல்படுகிறது. இந்தத் தளம் இந்திய ராணுவம், இந்திய விமானப் படைக்கு உதவி செய்யும் வகையில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் வரும் ஆண்டுகளில் மேம்படுத்தப்பட உள்ளது. கடற்படைக்கு மேம்படுத்தப்பட்ட இலகு ரக துருவ் ஹெலிகாப்டர் விரைவில் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது. அமெரிக்காவின் எம்.எச் 60 ஆர் என்ற வகை ஹெலிகாப்டர் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியக் கடற்படையின் பலம் மேம்படுத்தப்பட உள்ளது’’ என்று அஜேந்திர பஹதூர் சிங் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT