மதுக்கடைகள் திறப்பால் குடும்ப வன்முறை அதிகரிக்கும் என்பதால் மதுபான கடைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாட்டைக் காப்போம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
நாட்டைக்காப்போம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.சே.ராஜன் கூறியதாவது:
தமிழகத்தில் 2.3 கோடி வீடுகளில் 1.32 கோடி வீடுகளில் மது குடிப்பவர்கள் இருப்பதாக கனடா நாட்டு சமூக ஆர்வலர்கள் அண்மையில் நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆண்களில் 58 சதவீதம் பேர் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றனர். குடிப்பவர்களில் 33 சதவீதம் பேர் குழந்தைகளையும், 64 சதவீதம் பேர் மனைவியை அடிப்பதையும் வழக்கமாக கொண்டிருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கரோனா ஊரடங்கு முடிவுக்கு வருவதிற்கு முன்பே அரசின் வருமானத்தை பெருக்க முந்தைய அரசு செய்தது போல் மதுபான கடைகளை திறந்து விட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா ஊரடங்கால் வேலை இழந்து பெரும்பாலான மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். ரேசன் கடைகளில் கொடுக்கப்படும் விலையில்லா அரிசியும், ரூ.2 ஆயிரம் நிவாரணமும் மக்களை காப்பாற்றி வருகிறது. தற்போது அந்தப் பணத்தை மதுபானம் வாங்க செலவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, தற்போதைய சூழலில் மதுபான கடைகளை திறக்கும் முடிவை தமிழக அரசு மறு ஆய்வு செய்து உடனடியாக மதுபான கடைகளை மூட உத்தரவிட வேண்டும்.
மேலும் மதுபான ஆலைகளை மூடவும், மதுவைக் கட்டுப்படுத்தவும், மது நோயாளிகளை மதுவிலிருந்து விடுவிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக மக்கள் இயக்கங்களுடன் கலந்து பேசி அரசு முடிவெடுக்க வேண்டும். மக்களின் சமூக, பொருளாதார வாழ்வினைச் சீரழிக்கும் மதுபான கடைகள் தேவையா என்பதை அரசு சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.