மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கட்சி எல்லையைக் கடந்து மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
சமூகப் பொறுப்புணர்ச்சி திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்கள், மருத்துவ உபகரணங்கள், மருந்து மற்றும் நிவாரண உதவிப் பொருட்களை அரசுக்கு வழங்கி வருகின்றன. இந்நிலையில் இன்று (ஜூன் 18) பல்வேறு தனியார் நிறுவனங்கள் வழங்கிய வென்டிலேட்டர், ஆக்சிஜன் செறிவூட்டிகள், கிருமி நாசினிகள், முகக்கவசங்கள் உள்ளிட்டவை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் சுகாதாரத்துறையிடம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறைச் செயலர் அருண், ஆளுநரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, மாநில சுகாதார திட்ட இயக்குநர் ஸ்ரீராமலு ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்று வரும் தடுப்பூசி திருவிழாவை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இனிமேல் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காண்பிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை விதித்து நோயைக் கட்டுப்படுத்தியுள்ளோம். இது மிகப்பெரிய வெற்றி.
ஏனென்றால் மக்களின் வாழ்வாதாரத்தை முடக்காமலும், அதே நேரத்தில் கரோனா நம்மை முடக்கிவிடாமலும் இருக்க முழு முயற்சியுடன் செயல்பட்டோம். இதற்கு பொதுமக்கள் பங்களிப்பும் மிக முக்கியமாக இருந்தது. தற்போது எல்லோரும் முகக்கவசம் போட ஆரம்பித்துவிட்டார்கள். முகக்கவசம் போட்டவர்கள் தடுப்பூசி போடுங்கள்.
இதற்காக 100 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடந்து வருகின்றன. தடுப்பூசி மட்டும்தான் நம்மைப் பாதுகாக்கும் கவசம். வேறு எவற்றாலும் நாம் தப்பிக்க முடியாது. அரசு எல்லா விதத்திலும் பொதுமக்களுடன் துணை நிற்கிறது. அதே நேரத்தில் பொதுமக்களும் அரசுடன் துணைநிற்க வேண்டும்.
மக்கள் பிரதிநிதிகள் எல்லோரும் தடுப்பூசி திருவிழாவில் பங்கெடுத்துக் கொண்டுள்ளார்கள். கட்சி எல்லையைக் கடந்து மக்களின் நலனை அனைவரும் பாதுகாக்க வேண்டும். தேவையான அளவு தடுப்பூசி கையிருப்பு உள்ளது. 21-ம் தேதி முதல் எந்தவிதத் தடங்கலும் இன்றி தாராளமாகத் தடுப்பூசி கிடைக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு வரும்போது, புதுச்சேரிக்கு எவ்வளவு தடுப்பூசி வேண்டுமோ அதனை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளோம். இதுவரை மக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தயக்கமிருந்ததே தவிர, தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை.
இனிமேலும் தட்டுப்பாடு வராது. அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். அதேநேரத்தில் இந்தப் பாதுகாப்பையும் மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். புதுச்சேரியில் கரோனாவைக் கட்டுப்படுத்த தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
மூன்றாவது அலையை எதிர்கொள்வது மிகவும் இலகுவான காரியம். எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மூன்றாவது அலையை மிகவும் எளிதாக எதிர்கொள்ள முடியும். குழந்தைகளுக்குத் தொற்று வந்தால் எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஒரு தனிப் பிரிவே தயார் செய்யப்பட்டுள்ளது.
அங்கு போதிய அளவுக்கு படுக்கைகள், ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள் தயாராக உள்ளன. குழந்தைகள் அங்கு வரக் கூடாது என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.’’
இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.