தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவினை ஆராய்ந்து, பரிந்துரை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்கியது.
2020-21ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதேபோன்று, பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளில் கடந்த ஆண்டுகளின் மாணவர் சேர்க்கை விவரங்களின்படி, அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னிலை வகிக்கும் சுயநிதிக் கல்லூரிகளில், மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர்.
இதுகுறித்துக் குறிப்பிட்டு, இந்நிலை மாற்றப்பட வேண்டுமென்று பல்வேறு தரப்பினரிடமிருந்து அரசுக்குக் கோரிக்கைகள் வந்தன. இதையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஒரு குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்தார். இந்தக் குழு மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளைத் தீர ஆராய்ந்தும், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சமூகப் பொருளாதார நிலைகள் குறித்தும், அதனால் அவர்கள் சந்திக்கக்கூடிய இடர்ப்பாடுகள் ஏதாவது இருப்பின், அவற்றைக் கண்டறியும்.
இது தவிர கடந்த ஆண்டுகளில் அம்மாணவர்களின் சேர்க்கை, பல்வேறு தொழிற்கல்வி நிறுவனங்களில் எவ்வாறு உள்ளது என ஆய்வு செய்து, மேலே கூறிய அக்காரணிகளால், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சேர்க்கை தொழிற்கல்விகளான பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற படிப்புகளில் குறைந்த அளவில் உள்ள நிலையே இருந்தால், அதைச் சரிசெய்திட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பரிந்துரை செய்யவும் அக்குழுவுக்குப் பணிக்கப்பட்டது.
டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தில், கால்நடைத்துறை, வேளாண்துறை, மீன்வளம், சட்டத்துறை, அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர், தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்குநர், பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உள்ளிட்ட 9 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இவ்வாணையக் குழுவினரின் முதல் ஆய்வுக் கூட்டம் இன்று கிண்டி தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தில் தொடங்கியது. இதில் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஆணைய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இவர்கள் இன்று நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கண்ட படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ளது குறித்தும், சேர்க்கையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும், மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டதுபோல் உள் இட ஒதுக்கீடு வழங்க வாய்ப்புள்ளது குறித்தும் ஆய்வு நடத்துவார்கள்.
இந்த ஆணையம், தனது ஆய்வறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அளிக்கும்.