தனியார் ரப்பர் தொழிற்சாலையில் தீ விபத்து. 
தமிழகம்

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் ரப்பர் தொழிற்சாலையில் தீ விபத்து

ஆர்.நாகராஜன்

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் ரப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய டயர்கள் எரிந்து நாசமாயின.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்பூங்கா செயல்படுகிறது. இங்கு, தனியார் ரப்பர் தொழிற்சாலை செயல்படுகிறது. இந்தத் தொழிற்சாலை, பழைய டயர்களில் இருந்து ரப்பரைத் தனியாகப் பிரித்து, பொடியாக்கி மீண்டும் புதிய டயர்களை வடிவமைக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வருகிறது.

இந்நிலையில், இன்று (18-ம் தேதி) அதிகாலை இந்தத் தொழிற்சாலையின் முன்பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பழைய டயர்கள் குவிக்கப்பட்டிருந்த திறந்தவெளிப் பகுதியில் திடீரென தீப்பற்றியது. அந்தத் தீ, கட்டுக்கடங்காமல் 40 அடி உயரத்துக்குமேல் கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, தகவலறிந்த தேர்வாய் கண்டிகை சிப்காட் மற்றும் கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, இரு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 7 தண்ணீர் டிராக்டர்களைப் பயன்படுத்தி, சுமார் ஐந்து மணி நேரத்துக்கு மேல் போராடித் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய டயர்கள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து பாதிரிவேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT