துணைநடிகை அளித்த புகார் தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை காவல்துறையினர் மதுரை சென்று அவரைத் தேடி வருகின்றனர்.
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவருக்கு முன் ஜாமீன் வழங்க சாந்தினி மற்றும் காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, மணிகண்டனின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 16 அன்று தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, மணிகண்டனை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மணிகண்டனின் மனைவி மற்றும் உறவினர் மதுரையில் இருப்பதால், அவர் அங்கு பதுங்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, மதுரையில் முகாமிட்டுள்ள தனிப்படை போலீஸார், மணிகண்டனை தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் ஆதாரங்களைத் திரட்டும் பணியிலும் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, இந்தப் புகார் தொடர்பாக, மணிகண்டனின் மனைவி ராமநாதபுரம் எஸ்.பி.அலுவலகத்தில் ஒரு மனு அளித்திருந்தார். அதில், தன்னுடைய கணவர் மீது பொய்யான புகாரை நடிகை சாந்தினி அளித்திருப்பதாகவும், காழ்ப்புணர்ச்சி மற்றும் பணத்துக்காக இந்த புகார் கொடுப்பட்டுள்ளதாகவும், அந்த மனுவில் மணிகண்டனின் மனைவி தெரிவித்துள்ளார்.
அவர் அமைச்சராக இருந்தபோது அவருடைய உதவியாளர், ஓட்டுநர், பாதுகாப்பு அளித்த காவலர் என மூன்று பேருக்கும் சம்மன் கொடுக்கப்பட்டு, விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.
இதில், அவருடைய ஓட்டுநர் மட்டும் இன்னும் ஆஜராகவில்லை. கட்டாயக் கருக்கலைப்பு செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் விசாரிக்கவும் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.