காங்கயம் அருகே 20 ஆண்டுகளாக தனியாரின் ஆக்கிரமிப்பில் இருந்த அறநிலையத் துறைக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்பிலான நிலம் நேற்று மீட்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் சிவியார்பாளையம் பரமசிவன் கோயிலுக்கு சொந்தமான69.81 ஏக்கர் நிலம், சென்னிமலை - காங்கயம் சாலையில் உள்ளது.இந்த நிலம், 20 ஆண்டுகளுக்கும் மேலாக 19 பேரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக, 2017-ம்ஆண்டு இந்து சமய அற நிலையத் துறையின் இணை ஆணையரால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டது. இதில், கடந்த 24-ம் தேதி ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டு ஆக்கிரமிப்பாளர்கள் நிலங்களை ஒப்படைக்காததால், இந்து சமய அறநிலையத் துறை திருப்பூர் இணை ஆணையர் நா.நடராஜன் தலைமையில், உதவி ஆணையர் வெங்கடேஷ், செயல் அலுவலர் அருள்குமார் மற்றும் காங்கயம் ஆய்வாளர் அபிநயா ஆகியோர் முன்னிலையில், காவல், வருவாய் துறையினர், துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒத்துழைப்போடு, மேற்கண்ட நிலத்தில் இருந்து 19 பேரை நேற்று வெளியேற்றி, கோயில் பயன்பாட்டுக்கு கீழ் நிலம் கொண்டுவரப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.20 கோடி என அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.