தமிழகம்

நேரடி கொள்முதல் மூலம் தமிழகத்துக்கு 60 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள்

செய்திப்பிரிவு

தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலம், 60 ஆயிரம் தடுப்பூசிகள் நேற்று தமிழகம் வந்துள்ளன.

தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியில் மாநில அரசு தீவிரமாக உள்ளது. மத்திய மருந்து தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வரும் நிலையில், சில இடங்களில் தடுப்பூசிகள் கிடைக்காததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இதற்கிடையே, தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலம் ஹைதராபாத்தில் இருந்து நேற்று சென்னைக்கு 60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்தன. இவை தேனாம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவ கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டன.

தடுப்பூசிகளுக்கான தேவை அதிகமாக இருப்பதால், கூடுதலாக கரோனா தடுப்பூசிகளை வாங்க தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT