தமிழகம்

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 250 படுக்கைகளுடன் வார்டு அமைக்கும் பணி தீவிரம்: கரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கரோனா 3-ம் அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்சிஜன் வசதிகளுடன் 250 படுக்கைகள் கொண்ட வார்டு அமைக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில், விரைவில் 3-ம் அலை வரலாம் என அஞ்சப்படுகிறது. அதில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படக் கூடும் என்று எச்சரிக்கப்படுவதால், அதற்கான ஆயத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

சிறப்பு பயிற்சிகள்

மாநிலம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் நல வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் பணியாற்ற சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கூடுதல் வார்டு அமைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் எழிலரசி கூறியதாவது:

சென்னை எழும்பூர் மருத்துவமனையில் 837 படுக்கைகள் உள்ளன. கரோனா காலத்தில் 500-க்கும் மேற்பட்ட படுக்கைகள் அதற்கான சிகிச்சைக்காக மாற்றப்பட்டன.

தற்போது 3-வது அலையைக் கருத்தில் கொண்டு 250 படுக்கைகள் கொண்ட புதிய வார்டு அமைக்கப்பட்டு வருகிறது. ஏறத்தாழ அனைத்து படுக்கைகளிலும் ஆக்சிஜன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தயார் நிலையில்..

குழந்தைகளுக்கு கரோனா சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகள், கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. ஏற்கெனவே ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT