ஆவடி மாநகராட்சி அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஆவடி வர்த்தக சங்கம் சார்பில், முன்களப் பணியாளர்கள் உள்ளிட்ட ஏழை-எளியோர் 1000 பேருக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண உதவிகள் வழங்கும் விழா நேற்று ஆவடி, நேரு பஜாரில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
நிகழ்வில்அமைச்சர் சா.மு.நாசர் பேசும்போது, "ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த 30 நாட்களில் கரோனா பரவல் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் முன்களப் பணியாளர்கள் மிகவும் அர்ப்பணிப்போடு பணியாற்றுகின்றனர்’’ என்றார்.
தொடர்ந்து, தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரமைப்பு மாநிலதலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாசெய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்கள், நலிந்த வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு வணிகர் சங்கங்கள் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் இதுவரை 40 சதவீத வியாபாரிகள் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். மற்றவர்களுக்கு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை, கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் உள்ள அனைத்து வியாபாரிகளும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு தடுப்பூசி போட்டுக்கொள்ளாத வியாபாரிகள் மார்க்கெட்டுக்குள் நுழையாமல் இருக்கும் வகையிலான அறிவிப்புகளை ஓரிரு நாட்களில் வெளியிட உள்ளோம்.
செங்கல், சிமென்ட், கம்பி விலை உயர்வு செயற்கையானது. இது தொடர்பாக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வியாபாரிகள் வங்கிகளில் இருந்து பெற்ற கடன் தொகைக்கான மாத தவணைகளுக்கு காலக்கெடு கேட்டுள்ளோம். பிரதமருடனான சந்திப்பின்போது, முதலமைச்சர் 6 மாத தவணைகளுக்கு காலக்கெடு பெற்றுத் தருவார் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.