பெண்களை அவமதிக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட பப்ஜி மதனை விரைவில் கைது செய்வோம் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஆதரவற்ற நிலையில் பொது இடங்களில் தங்கியுள்ள நபர்கள், பெண்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு உதவ, ‘காவல் கரங்கள்’ என்ற திட்டத்தை சென்னை காவல்துறை கடந்த ஏப்ரல் 21-ம் தேதி அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் மூலம் கடந்த மாதம் 12-ம் தேதி ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை மேம்பாலத்தின் கீழ்பகுதியில் ஆதரவற்ற நிலையில் கிடந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜாபர் அலி என்ற இளைஞர் மீட்கப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பூரண குணமடைந்த ஜாபர் அலியை அவரது குடும்பத்தினரிடம் காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று ஒப்படைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
‘காவல் கரங்கள்’ திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 65 தன்னார்வலர்களை இணைத்து செயல்படுகிறோம். உதவி, மீட்பு தொடர்பாக தொடர்ந்து அழைப்புகள் வருகின்றன.
பெண்களை அவமதிக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் பப்ஜி மதனின் மனைவியை சேலத்தில் வைத்து கைது செய்துள்ளோம். அவரது வீட்டில் இருந்து செல்போன், டேப்லட், கணிணி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். அதை ஆய்வு செய்து வருகிறோம். மதன் தலைமறைவாக உள்ளார். அவரை தீவிரமாக தேடி வருகிறோம். விரைவில் கைது செய்வோம்.
மதனைப் போல் வேறு சிலரும் இதேபோல் ஆபாச வீடியோக்களை பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுகுறித்தும் விசாரித்து வருகிறோம். திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கு தொடர்பாகவும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர் என்.கண்ணன், காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையர் ராமர், நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர்கள் எஸ்.விமலா, கே.தர் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நிலையில் யூ டியூப் மூலம் கிடைத்த பணத்தை மதன் பங்குச் சந்தை மற்றும் பிட் காயினில் முதலீடு செய்தாரா எனவும் சைபர் கிரைம் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். மதனின் வங்கி கணக்கு அவரது பணப் பரிவர்த்தனைகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.