தமிழகம்

மருத்துவத் துறையில் ‘அவுட் சோர்சிங்’ முறை ஒழிக்கப்படும்: சுகாதாரத் துறை அமைச்சர்

செய்திப்பிரிவு

மருத்துவத் துறையில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்கள் நியமனம் ஒழிக்கப்படும் என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கரோனா ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர், அவர் கூறியது:

புதுக்கோட்டையில் தொடங்கப்பட்டுள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் கல்லூரிப் பணிகள் தொடங்கப்படும். மருத்துவத் துறையில் அவுட்சோர்சிங் முறையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள பணியாளர்களின் ஊதியப் பிரச்சினை குறித்து ஆட்சியர்கள் மூலம் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவத் துறையில் அவுட்சோர்சிங் முறை முழுமையாக ஒழிக்கப்படும்.

இதர பணியாளர்களைப் போலவே, மருத்துவத் துறை பணியாளர்களும் நேரடியாக அரசின் மூலம் நியமிக்கப்படுவர்.

தமிழகம் முழுவதும் அரசுக் காப்பீட்டுத் திட்டத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த 40 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்ததுடன், முத்துலட்சுமி ரெட்டி மருத்துவமனை வளாகத்தில் முன்களப் பணியாளர்களுக்கு தொலைபேசி வழி மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில், மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் சி.விஜயபாஸ்கர், வை.முத்துராஜா, எம்.சின்னதுரை, ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

நிகழ்வுகளில், திருவாரூர் ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன், நாகை எம்.பி எம்.செல்வராஜ், எம்எல்ஏக்கள் பூண்டி கே.கலை வாணன், க.மாரிமுத்து உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT