ஜோலார்பேட்டை நகராட்சியில் அதிகாரிகளின் அராஜக போக்கை கண்டித்து, ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இங்கு, ஒப்பந்த அடிப்படையில் 60-க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஒப்பந்த தூய்மைப் பணியாளர் களை நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர் ரமேஷ் மற்றும் துப்புரவு ஆய்வாளர் உமாசங்கர் ஆகியோர் தரக்குறைவாக பேசுவ தாகவும், பணியில் ஈடுபட்டு வரும் பெண் தொழிலாளர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டுவதாக குற்றஞ்சாட்டி நேற்று காலை நகராட்சி அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் கூறும்போது, ‘‘ஜோலார்பேட்டை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 60-க்கும்மேற்பட்ட தூய்மைப் பணியாளர் கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு ஆண்டுதோறும் உயர்த் தப்பட வேண்டிய சம்பளத்தொகை கடந்த 4 ஆண்டுகளாக உயர்த்தி தரப்படவில்லை.
மேலும், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மற்றும் பணி மேற்பார்வையாளர் எங்களை அவதூறாக பேசி வருகின்றனர். இதை தட்டிக்கேட்டால் வேலை இல்லை எனக் கூறுகின்றனர். எங்களில் பலருக்கு இதுவரை அடையாள அட்டைகள் வழங்கப்படவில்லை. கரோனா ஊரடங்கு காலத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் பணி செய்து வருகிறோம்.
எங்களுக்கு சேர வேண்டிய நியாயமான வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை. தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பிஎப் உள்ளிட்ட ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத் திடம் பலமுறை எடுத்துக்கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை.
ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருவதால் தொடர்ந்து நாங்கள் புறக்கணிக்கப்பட்டு வரு கிறோம். எனவே, எங்களுக்கு சேரவேண்டிய அடிப்படை தேவைகள், உரிமைகள் எங் களுக்கு கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியும், எங்களை ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்து வரும் துப்புரவு ஆய் வாளர் உமாசங்கர் மற்றும் பணி மேற்பார்வையாளர் ரமேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி அவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். அதுவரை நகராட்சி பகுதிகளில் தூய்மைப்பணியில் ஈடுபட போவதில்லை என முடிவு செய்துள்ளோம்’’ என்றனர்.
இதைத்தொடர்ந்து, நகராட்சி ஆணையாளர் ராமஜெயம் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். அதில், பிஎப், சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்று வதாகவும், நகராட்சி அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்தார்.
அதன்பேரில், போராட்டத்தை கைவிட்ட தூய்மைப் பணி யாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.