திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘ஹலோ திருவண்ணாமலை போலீஸ்’ அறிமுகம் செய்யப் பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்றிரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் 2-வது பெரிய மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் உள்ளது. மாவட்டத்தின் தலைநகரான திருவண்ணா மலையில் இருந்து வந்தவாசி, செய்யாறு போன்ற நகரங்கள் 100 கி.மீ., தொலைவில் உள்ளன. இதனால், மாவட்ட காவல் அலுவலகத்தை பொதுமக்கள் தொடர்பு கொள்ளவும், கரோனா காலத்தில் தேவையற்ற பயணத்தை குறைக்கும் வகையில், ‘ஹலோ திருவண்ணாமலை போலீஸ்’ என்ற காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் 99885 76666 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ்-அப் மூலமாக தெரிவிக்கலாம்
இந்த எண்ணை தொடர்பு கொண்டும் மற்றும் வாட்ஸ்- அப் மூலமாக மணல் கடத்தல், கஞ்சா விற்பனை செய்தல், சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்தல், மதுபானங்கள் கடத்துதல், சூதாட்டம் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம். மேலும், வாட்ஸ்-அப் எண் மூலமாக தங்களது குறைகள் குறித்த மனுவை பொதுமக்கள் அனுப்பி வைக்கலாம். மக்களின் புகார்கள் அனைத்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகிய எனது கவனத்துக்கு கொண்டு வரப்படும். எனது நேரடி மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் அமைக் கப்பட்டுள்ள 3 சிறப்பு தனிப் படைகள் மூலம் 24 மணி நேரத் துக்குள் தீர்வு காணப்படும்.
புகார் அளிப்பவர்களின் தொலைபேசி எண் மற்றும் அவர்களின் அடையாளம் மற்றும் அளிக்கப்படும் தகவல்கள் குறித்து ரகசியம் காக்கப்படும்.
புகார் தெரிவித்த ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அந்தந்த உட்கோட்டத்துக்கு உட்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தை அணுகினால், அங்கிருந்து வெப் கேமரா மூலமாக ஞாயிற்றுக்கிழமை தவிர பிற வேலை நாட்களில் பகல் 12 மணி முதல் 1 மணி வரை மாவட்ட காவல் கண்காணிப் பாளரை அங்கிருந்தே தொடர்பு கொண்டு புகார் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித் துள்ளார்.