கூடலூரில் காயத்துடன் பிடிபட்ட காட்டு யானை, முதுமலை, அபயரணத்தில் கட்டப்பட்ட கரால் எனப்படும் மரக்கூண்டில் அடைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனச் சரகத்தில் உள்ள மேல்கூடலூர், கோக்கால், சில்வர்கிளவுட் ஆகிய பகுதிகளில் கடந்த ஓராண்டாகப் பின்பகுதியில் பலத்த காயத்துடன் சுமார் 30 வயதுடைய ஆண் யானை சுற்றி வந்தது. இரண்டு ஆண்டுகளில் அந்தக் காயம் பெரிதாகி, யானையின் பின்பகுதி முழுக்கப் புரையோடி புழு வைத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் அவதிப்பட்டு வந்தது.
‘இந்த யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடித்து சிகிச்சை அளித்தால் உயிரிழக்க வாய்ப்புள்ளது’ எனத் தெரிவித்த வனத்துறையினர், சிகிச்சை அளிக்கத் தயக்கம் காட்டியே வந்தனர். மிக மோசமான காயத்துடன் அவதிப்பட்டு வரும் இந்த யானைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், யானையைப் பிடித்து சிகிச்சை அளிக்க முடிவு செய்த வனத்துறையினர், முதுமலையில் உள்ள அபயரண்யம் பகுதியில் கரால் எனப்படும் மரக்கூண்டை அமைத்து வந்தனர். இந்நிலையில், நேற்று புத்தூர் வயல் பகுதியில் தென்பட்ட யானையை மயக்க ஊசி செலுத்தாமல், விஜய், சுமங்களா ஆகிய இரண்டு கும்கி யானைகளின் உதவியுடன் கால்நடை மருத்துவர்கள் பிடித்துக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். யானையை அப்பகுதியில் உள்ள மரத்தில் கட்டிவைத்தனர்.
இந்நிலையில், இன்று ஈப்பங்காடு பகுதியில் பிடிபட்ட யானை, கும்கிகள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டு முதுமலை அபயரண்யம் பகுதிக்குக் கொண்டுவரப்பட்டது. அபயரண்யம் பகுதியில் கொட்டும் மழையில் உதவி முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர் அன்வருதீன், கூடலூர் வன அலுவலர் பொம்மு ஓம்காரா தலைமையில் யானையைக் கூண்டில் அடைக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டனர். கால்நடை மருத்துவர்கள் ராஜேஷ்குமார், விஜயராகவன், சுகுமாரன், ஓய்வுபெற்ற மருத்துவர் மனோகரன் ஆகியோர் காயமடைந்த யானைக்கு மருந்து போட்டனர்.
பின்னர், விஜய், சுமங்களா, வசீம், சீனிவாசன், கணேஷ், முதுமலை, பொம்மன் ஆகிய கும்கிகள் புடைசூழ, பாகன்கள் காட்டு யானையைக் கராலுக்கு இழுத்துச் சென்றனர். காட்டு யானை எதிர்ப்பு காட்டாமல் கராலுக்குள் சென்றது.
இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பகக் கள இயக்குநர் கே.கே.கவுசல் கூறும்போது, ''முதுமலை கும்கிகள், பாகன்கள் கூடலூர் வனத்துறையினருடன் இணைந்து காயமுற்ற காட்டு யானையைப் பிடித்து, வனத்திலேயே சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். இன்று யானைக்கு மயக்க ஊசி செலுத்தாமலேயே லாரியில் ஏற்றப்பட்டு, அபயரண்யத்தில் அமைக்கப்பட்ட கூண்டில் அடைக்கப்பட்டது. யானைக்குத் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவர்கள் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யானை விரைவில் குணமடையும் என எதிர்பார்கிறோம். ஒரு காட்டு யானை மயக்க ஊசி செலுத்தப்படாமல் மரக்கூண்டில் அடைக்கப்பட்டது இதுவே முதல் முறை'' என்று தெரிவித்தார்.