பில்லூர் அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் தண்ணீர். 
தமிழகம்

பில்லூர் அணை நிரம்பியதால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

டி.ஜி.ரகுபதி

கனமழையால், பில்லூர் அணை நிரம்பியதைத் தொடர்ந்து, அணையிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டது. இதனால், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் காரமடை அருகே, தமிழக - கேரள எல்லைப் பகுதியான, பில்லூர் வனப்பகுதியில் அமைந்துள்ள பில்லூர் அணை, நீலகிரி மற்றும் கேரளக் காடுகளை நீர்ப்பிடிப்புப் பகுதியாகக் கொண்டுள்ள, பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இதன் மொத்தக் கொள்ளளவு 100 அடி ஆகும்.

நேற்று (ஜூன் 16) காலை நிலவரப்படி அணையில் 82 அடிக்கு நீர் மட்டம் இருந்தது. கடந்த சில நாட்களாக, நீர்ப்பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. தொடர் நீர்வரத்தால், பில்லூர் அணையிலும் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.

இந்நிலையில், தென்மேற்குப் பருவமழையின் தீவிரம் காரணமாக, பில்லூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரத் தொடங்கி, அணையின் மொத்த நீர்த்தேக்க உயரமான 100 அடியில் நீர்மட்டம் 97 அடியை இன்று (ஜூன் 17) காலை கடந்தது.

அப்போதைய சூழலில், பில்லூர் அணைக்கு, விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி நீர்வரத்து வந்துகொண்டு இருந்ததால், பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக விநாடிக்கு, 14 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரி நீராக பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதில், மின் உற்பத்திக்காக மட்டும் 6,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணையில் இருந்து தொடர்ச்சியாக உபரி நீர் வெளியேற்றப்படுவதால், பவானி ஆற்றின் வேகம் அதிகரித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதனால், பவானி ஆற்று கரையோரப் பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்களுக்கு கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேற்றும், இன்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் எச்சரிக்கை

பவானி ஆற்றில் யாரும் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல்கள் மூலம் ஆற்றைக் கடக்கவோ முயல வேண்டாம் எனவும், மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்ட உயரம் 97 அடியைக் கடந்ததால் அணைக்கான நீர்வரத்து அப்படியே ஆற்றில் திறந்து விடப்படும் என்பதால், கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் மேடான பகுதிகளுக்குச் செல்லவும் மாவட்ட நிர்வாகத்தினர் எச்சரித்துள்ளனர்.

நேற்று இரவு எட்டு மணி முதலே அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படத் தொடங்கியதால், சிறுமுகை காவல்துறை நிர்வாகத்தின் சார்பில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாயம் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் பணி நள்ளிரவு வரை தொடர்ந்து நடைபெற்றது.

மேலும், மீட்புப் பணிகளுக்காக, மேட்டுப்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையினர், அவசர கால உதவிக்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். பில்லூர் அணை திறக்கப்பட்டு பவானியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பவானி சாகர் அணையின் நீர்மட்டமும் உயரும் என மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீவிரக் கண்காணிப்பு

இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் கூறும்போது, "தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், பவானி ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளது. தீயணைப்புத் துறையினர் கரையோரம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவசர காலத்துக்குப் பயன்படுத்தப்படும் கருவிகளுடன் அவர்கள் தயார் நிலையில் உள்ளனர். அதிகாரிகளும் நீரோட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்" என்றனர்.

SCROLL FOR NEXT