தமிழ்நாட்டில் காலியாக உள்ள மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையர்களிடம் டி.ஆர்.பாலு, வில்சன் நேரில் வலியுறுத்தினர்.
திமுக பொருளாளரும், மக்களவை திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலுவும், மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சனும் நேற்று மாலை, தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணையர்களான ராஜிவ் குமார், அனுப் சந்திரா பாண்டே ஆகியோரை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் காலியாக உள்ள மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தலை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் படி, உடனடியாக நடத்த வேண்டுமென வலியுறுத்தினர்.
அப்போது டி.ஆர்.பாலு, திமுக சார்பில் கடிதம் ஒன்றைத் தேர்தல் ஆணையத்திடம் அளித்தார்.
அந்தக் கடிதத்தின் விவரம்:
“மார்ச் 23, 2021 அன்று மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் இறந்த காரணத்தினாலும், மே 10, 2021 அன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியைத் துறந்த நிலையிலும், அந்த மூன்று பேருடைய பதவிக்காலம் முறையே 24.7.2025, 29.06.2022 மற்றும் 02.04.2026 ஆகிய தேதிகளில் முடிவடையும் நிலையில் தற்போது தமிழ்நாட்டில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தலை, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் படி உடனடியாகத் தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 147ன் படி மாநிலங்களவைக்கான தற்காலிக காலியிடங்கள் தனித்தனியான தேர்தல்கள் மூலம் நிரப்பட வேண்டும், பிரிவு 70-ன் படி பதவிகளைத் துறந்ததால் ஏற்படும் காலியிடங்களைத் தற்காலிக காலியிடங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவைச் செயலகம், முகமது ஜானால் நிரப்பப்பட்டிருந்த உறுப்பினர் பதவி, கடந்த மார்ச் 24, 2021 முதலாக காலியாக உள்ளது. வைத்திலிங்கம் மற்றும் கே.பி.முனுசாமி வகித்த இடங்கள் மே, 12, 2021 முதலாக காலியாக உள்ளது என்றும் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ள நிலையில், தேர்தல் ஆணையம், உடனடியாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் படி தற்காலிக காலியிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அம்மூன்று தற்காலிக காலியிடங்களுக்கு இடைத்தேர்தல் உடனடியாக நடத்தாமல் காலதாமதம் செய்வதால் தமிழக மக்களின் உரிமைகளைத் தேர்தல் ஆணையம் புறக்கணிக்கும் வகையில் நடந்துகொள்வது ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள நோக்கங்களுக்கும் எதிரானதாகும்.
2019ஆம் ஆண்டில், அமித் ஷா மற்றும் ஸ்மிருதி இரானி ஆகியோர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அதன் விளைவாக மாநிலங்களவையில் ஏற்பட்ட தற்காலிக காலியிடங்களுக்குத் தனித்தனியான இடைத்தேர்தல்களைத் தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது.
மேலும், நவம்பர் 2020-ல் அகமது படேலின் மறைவால் ஏற்பட்ட தற்காலிக காலியிடத்திற்கும், டிசம்பர் 2020-ல் அபய் பரத்வாஜின் மறைவால் ஏற்பட்ட தற்காலிக காலியிடத்திற்கும் மார்ச் 2021-ல் தனித்தனியான இடைத்தேர்தல்களைத் தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது. இதே நிலையை உச்ச நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேற்கூறிய காரணங்களால், மாநிலங்களவையில் ஏற்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கான மூன்று தற்காலிக காலியிடங்களை, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் படி உடனடியாக தனித்தனி இடைத்தேர்தல் மூலமாக நிரப்ப ஆவன செய்து தமிழக மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்”.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.