தமிழகம்

ஒரு கிலோ முள்ளங்கி ஒரு ரூபாய்க்கு கொள்முதல்: இடைத்தரகர்களின் தலையீட்டால் விவசாயிகள் வேதனை

எம்.நாகராஜன்

இடைத்தரகர்கள், மொத்த வியாபாரிகளின் தலையீட்டால், உடுமலையில் ஒரு கிலோ முள்ளங்கிஒரு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், அரசே விலையை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலையில் உள்ள ஜக்கம்பாளையம், கல்லாபுரம், ஆண்டியகவுண்டனூர், அமராவதி, கண்ணமநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பலர், முள்ளங்கி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். 2 மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும் என்பதால் சிறு, குறு விவசாயிகளின் தேர்வாக முள்ளங்கி மாறியுள்ளது. தற்போது, அறுவடை தொடங்கியுள்ளதால், சந்தைக்கு வரும் முள்ளங்கியின் வரத்து அதிகரித்துள்ளது. 50 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை முள்ளங்கி, ரூ.50-க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:

முள்ளங்கி மட்டுமல்ல, எந்த ஒரு காய்கறிப் பயிரையும் சாகுபடி செய்து, அறுவடை வரை, அதை பாதுகாக்க விவசாயிகள் பெரும் சிரமப்படுகின்றனர். ஆனால் மொத்த வியாபாரிகள், நிலத்தில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து, பெங்களூரூ, சென்னை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

ஒரு கிலோ முள்ளங்கி, ஒரு ரூபாய் என கொள்முதல் செய்கின்றனர். ஆனால் மார்க்கெட்டில் ரூ.15-க்கு விற்பனை செய்கின்றனர். இதை எதிர்த்து கேட்டால், கொள்முதல் செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர். பெரும்பாலான விவசாயிகள், மொத்த வியாபாரிகளையே நம்பி இருக்கும் சூழல் உள்ளது. உற்பத்திச் செலவுகூட கிடைக்காமல், எதற்காக விவசாயம் செய்ய வேண்டும்என்ற எண்ணம் உருவாகிறது.

எனவே விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைத்தரகர்களின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறுஅவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT